Tuesday, August 8, 2017

ஆசிரியா் நூலகம்

வணக்கம்.

 2016 ஈரோடு புத்தகத் திருவிழாவையொட்டி ஆசிரிய நண்பா்களுக்காக முகநுாலில் ( Thangamani Elasiappan ) ஆசிரியா் நுாலகம் என்ற தலைப்பில் தினமும் ஒரு  புத்தக அறிமுகக் குறிப்பை பதிவிட்டேன். விளையாட்டாய் தொடங்கியது பரவலாக கவனம் பெற்றதால்  60 புத்தகங்கள்வரை தொடர்ந்தது. முகநுாலின் பதிவுகளை ஒரே இடத்தில் தொகுத்துத்தரும் முயற்சியே இவ்வலைப்பூ.

இது முழுமையான பட்டியலோ புத்தகங்களைப்பற்றிய விரிவான விமர்சனமோ அல்ல. நான் படித்தவற்றில் என்னளவில் முக்கியமாக கருதிய புத்தகங்களைப்பற்றிய சிறிய அறிமுகக் குறிப்புகள்  மட்டுமே.

இப்பதிவுகள் நிச்சயம் தமிழில் வந்துள்ள கல்வி நுால்கள் பற்றிய எளிய அறிமுகத்தை தரும் என நம்புகிறேன்.

உங்களின் ஆலோசனைகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
நன்றி.

அன்புடன்
.தங்கமணி
thangamani.map@gmail.com
Facebook :.Thangamani Elasiappan

Saturday, August 5, 2017

ஆசிரியா் நூலகம் -61 தெருவிளக்கும் மரத்தடியும்


தெருவிளக்கும் மரத்தடியும்
.மாடசாமி
புதிய தலைமுறை வெளியீடு.

நமது பாடத்திட்டத்தை மாற்றவேண்டும் நாடு முழுதும் ஒரே பாடத்திட்டத்தை
அறிமுகப்படுத்தவேண்டும் என்ற குரல்கள் ஒலித்தபடி உள்ளன.
அதற்கு முன்னதாக நமது ஆசிரியர் கல்விமுறையை (Teacher Education) மாற்றவேண்டும்.

எந்த பாடதிட்டமாக இருந்தாலும் தற்போதைய வகுப்பறைகள் தேர்வுகளுக்கான பயிற்சிக் களங்களாக மட்டுமே இருக்கும்.
எனவே ஆசிரியர் பயிற்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவதன் விளைவாக வகுப்பறைகளை உயிரோட்டமுள்ளதாக்கலாம்.
அப்படி அமையப்போகும் ஆசிரியர் பயிற்சிக்கு கல்வியாளர் .மாடசாமி
அவர்களின் நூல்களை பாடமாக வைக்கவேண்டும்.

தெருவிளக்கும் மரத்தடியும் அவரது 17 கட்டுரைகள் அடங்கிய
புதிய தொகுப்பு.

மெல்லிய நகைச்சுவை,குட்டிக்கதைகளோடு
அவர் எழுத்துக்கள் நமது வகுப்பறைகளின் போதாமையை சுட்டிக்காட்டுவன.
நீண்ட அனுபவத்தில் அவரது ஓயாத தேடலும், களப்பணியும்,கல்வி குறித்த தொடர் சிந்தனைகளும்,படித்த புத்தகங்களிலிருந்து பெற்ற புரிதல்களும் அடங்கிய நம்மை சிந்திக்கத்தூண்டும் புத்தகம்.



ஆசிரியர் நூலகம்- 60 . நீர் நிலம் வனம்: கடல்


நீர் நிலம் வனம்: கடல்
     சமஸ் 
                            தி இந்து வெளியீடு.
                                                                             
            இந்த நூல் பேசுவது சூழலியலா? வரலாறா? அரசியலா?
-
எல்லாமும்தான்.


சமஸின் இந்தக் கட்டுரைகள்   சமூகத்தின் விளிம்பில் கடலை நம்பி வாழும் மனிதர்களின் கடல்சார் வாழ்க்கை பற்றி கரிசனத்தோடு பேசுவதுடன்
நமது பேராசையின் கரங்களால் கடலோரப் பகுதிகளில் நிகழ்ந்துவரும் சூழலியல் அழிவுகளை பதிவுசெய்கிறது.


பழவேற்காடு துவங்கி ராமேஸ்வரம் வரையேயான நீண்ட கடற்கரை சமூக விரோதிகளால்,அரசியல் வாதிகளால், தரகர்களால், பேராசை கொண்ட தொழில் அதிபர்களால் சீரழிக்கப்படுவதை இக்கட்டுரைகள் நேர்படப் பேசுகின்றன.

சூழல் அழிவு என்று வெற்று கூக்குரலிடாமல் நீண்ட களப்பயணத்தில் பல இடங்கள், மனிதர்களின் வாய்மொழி வழியாக விரியும் சுவாரசியமான நூலிது.

தனுஷ்கோடி புயலும், போட் மெயில் வரலாறும் நூலின் உச்சம் எனலாம்.
தமிழில் இது புதுவித எழுத்து. நமக்கு புதிய உலகத்தை/ அனுபவத்தை தரக்காத்திருக்கிறது.

ஆசிரியர் நூலகம்- 59. நம் கல்வி... நம் உரிமை!


               நம் கல்வி... நம் உரிமை!
வெளியீடு:  
                     தி இந்து &தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
                              ★★★★★

இந்து நாளிதழில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடரின் தொகுப்பு.
சமூகத்தில் அரசு பள்ளிகளின் மேல் உள்ள எதிர்மறையான கருத்தியலுக்கு மாறாக அரசுப்பள்ளிகள், ஆசிரியர்களின் மேன்மையை சமகால உதாரங்களுடன் விளக்கும் நூல்.

அரசு பள்ளிகளின் மீதான ஏக்கமாக, அவற்றின் சாதனைகளை கொண்டாடும் விதமாக,நம் கல்வி அமைப்பும் பள்ளிக்கூடங்களும் செல்லவேண்டிய திசைகாட்டியாக கல்வியாளர்கள், எழுத்தாளர்கள்,பத்திரிக்கையாளர்கள் என பல தரப்பினரும் தங்களது கருத்துக்களை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்துள்ளனர்.

எத்தனை தனியார் பள்ளிகள் வந்தாலும் அரசு பள்ளிகளால்தான் இந்த சமூகத்துக்கு சரியான குடிமக்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை உறுதிசெய்யும் நூல்.