கொடுங்காற்றில் ஒரு விளக்கு
லல்லாவின் கவிதைகள்
தேர்வும் மொழிபெயர்ப்பும்
எம் கோபாலகிருஷ்ணன்
லல்லா 14 ஆம் நூற்றாண்டில் காஷ்மீரில் வாழ்ந்த கலகக்கார பெண் துறவியும் கவிஞருமாவார்.
தற்போது கவிதை என்று கூறப்படும் நல்லாவின் வாக்குகள் அவரால் தன் போக்கில் தனியாக அலைந்து கொண்டிருந்தபோது சொல்லப்பட்டவை. அவை செவிவழியாக கேட்டு வாய்வழியாக சொல்லப்பட்டு பல தலை முறைகளையும் கடந்து வந்ததுள்ளது.
அந்த வாக்குகள் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் எளிய மொழியில் இருந்ததாலும் அன்றைக்கு வழக்கில் இருந்த பல நடைமுறைகளை விமர்சித்து கேள்வி கேட்ட கலக குரல் என்பதாலும் பரவலாக கவனம் பெற்றது.
இன்று லல்லாவின் வாய்மொழிகள் காஷ்மீர் முழுக்கவும் மந்திரங்களாகவும் பாடல்களாகவும் கவிதைகளாகவும் ஒலிக்கின்றன.
மனிதனின் இயல்பான ஆன்மீக உணர்வை சுயநல நோக்குடன் திசை திருப்பி அளிக்கும் எல்லாவிதமான அடக்குமுறை அமைப்புகளுக்கும் எதிராக குரல் கொடுத்ததுடன் தனது காலத்தில் நிலவிய சமத்துவமின்மை, அநீதி, மூடப்பழக்கங்கள் ஆகியவை கடுமையாக விமர்சிப்பவை அவரது கவிதைகள்.
சமய மத நம்பிக்கைகளை கடந்து மனிதன் தன்னை அறிந்து கொள்வதே எல்லாருக்குமான மார்க்கமாக இருக்கும் என்ற மேன்மையான தத்துவத்தை காட்டுவதாலேயே லல்லாவின் கவிதைகள் அனைவருக்கும் நெருக்கமாக அமைகின்றன.
கோபாலகிருஷ்ணன் அவர்களின் மொழிபெயர்ப்பு நவீன தமிழ் கவிதையாக உணரச் செய்கிறது.
0000
குளிரை விரட்டமட்டும்
உடுத்தினால் போதும்
பசியை அகற்ற மட்டும்
உண்டால் போதும்
நினைவில் கொள்
அண்டங்காக்கைகள் கொத்தித் தின்னவே
இந்த உடம்பு
,,,,
இந்த மேடையில்
அவனைத் தேடு
அவன் பல வேடங்களை பூண்டிருக்கிறான்
விரோதத்தையும் சினத்தையும் வெறுப்பையும் களைந்திடு
கிடைப்பதை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்
அவனை நீ கண்டறிவாய்
,,,,
பத்மாசனமிட்டு
மூச்சை அடக்குவதால் மட்டும்
மெய்யை கண்டறிய முடியாது உன்னால்
விடுதலைக்கான பாதைக்கு
உன்னை விட்டு செல்லாது பகற்கனவுகள்
வேண்டிய அளவு உப்பை
நீ கலந்த போதும்
கடலாகி விடாது தண்ணீர்
,,,,
வேதங்களை கற்றுணர்ந்ததாக
எண்ணுவோர்க்கு வாழ்த்துக்களை சொல்லுகிறேன்
என் தலைப்பில் ஓடிக்கொண்டிருப்பது மாபெரும் வேதம்
,,,,
மரத்தால் ஓர் வில்
அதில் புல்லால் செய்த அம்பு
கைத்திறனில்லா தச்சனைக் கொண்டு
கட்டிய மாளிகை
நெரிசலான கடைத் தெருவில்
பூட்டப்டாமல் ஒரு கடை
புனித நீரால் தூய்மை அடையா உடல்
நடக்கப் போவதை யார் அறிவார்?
,,,,
உண்ணாமல் பருகாமல் விரதமிருந்து
உடலை வருத்தாதே
விரும்பியதை ருசித்து புசி
சத்தான உணவும் ஆடம்பர உடுப்பும்
எதற்கும் உதவாது
வேண்டியோர்க்கு உதவுதலைவிட
வழிபாடு வேறு இல்லை
,,,,
உன் கழுதையை இஷ்டம்போல திரிய விடாதே
அடுத்தவரின் குங்குமப்பூ வயலை மேய்ந்துவிடும்
உனக்காக அடி உதைகளை வாங்க
அடுத்தவர் எவரும் முதுகைக் காட்ட மாட்டார்கள்
,,,,
அது உன் அம்மணம் மறைத்தது
கடுங்குளிரிலிருந்து உன்னைக் காத்தது
வெறும் நீரும் புல்லுமே
அதன் ஆகாரம்
உயிரற்ற கல்லுக்கு
உயிருள்ள ஆடொன்றை
வெட்டி பலியிட வேண்டுமென
யார் சொன்னது உனக்கு?
,,,,
பூமியில் புதைந்திருக்கும் பாறைதான்
சாலைகளில் கற்களாகவும்
இளைப்பாற இருக்கையாகவும்
இறைவனின் கோயிலாகவும்
திருகையில் அரைக்கும் கல்லாகவும் உள்ளது
இறைவனை அடைவதென்பது சுலபமல்ல
இதிலிருக்கும் பாடத்தை கவனி.
,,,,
சிவன் குதிரை
விஷ்ணு கடிவாளம்
பிரம்மன் சேணை வளையம்
யோகத்தின் ஒளிகொண்டு
யோகியே அறிவான்
எந்தக் கடவுள் இந்த
பரியிலேறுவான் என்று.
,,,,
காற்றில் நுழைந்து ககனத்தை அளந்து பத்து திசைகளிலும் அலைந்தேன் உடலின் ஒன்பது வாசல்களையும் அடைத்தேன்
உள்ளேயும் வெளியேயும் வெற்றிடத்திலும்
காணும் இடமெங்கும் கண்டேன் அவனையே.
0000
லல்லாவின் வாக்கு
கோபாலகிருஷ்ணனின் மொழிபெயர்பு
நூல்வனத்தின் தயாரிப்பு
எல்லாமே அழகு .
முழுமையாக வாசிக்க
கொடுங்காற்றில் ஒரு விளக்கு
லல்லாவின் கவிதைகள்
தேர்வும் மொழிபெயர்ப்பும்
:எம் கோபாலகிருஷ்ணன்
நூல்வனம் வெளியீடு
9176549991






Comments