Monday, March 25, 2024

தகடூர் வட்டார வழக்கு சொல் அகராதி

 தகடூர் வட்டார வழக்குச்சொல்   அகராதி

முனைவர் கு.சிவப்பிரகாசம் 



       மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ரயிலில் சென்று கொண்டிருந்தோம். ஓரிரு வார்த்தைகளே பேசிய நிலையில் , தருமபுரியா என்று குறுஞ்சிரிப்போடு கேட்டார் டிக்கெட் பரிசோதகர்.

டிக்கெட் உங்கிட்ட கீதா என்று நான் கேட்டதில் அவர் கண்டுபிடித்துவிட்டதாக உடன் வந்த நண்பர் வருத்தப்பட்டார். எனக்கு எந்த வருத்தமோ தாழ்வுணர்ச்சியோ இல்லை. 

'கீதா' என்ற சொல் நம்மூருக்கு உரியது என்றால் பெருமிதம்தான்.அது ஒன்றும் கெட்ட வார்த்தையோ சொல்லத் தகாததோ அல்ல . நாஞ்சில்நாடனிடம் கேட்டால் பழந்தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் கீது வந்திருக்கிறது என சொல்லக்கூடும். 

இப்படி ஊர் தோறும் மக்கள் அன்றாடம் பேசி வரும் பல சொற்களை வட்டார வழக்கு என்று ஒதுக்கி வைத்திருக்கிறோம் ‌.

ஒரு மொழியின் வளமே அதன் சொற்களஞ்சியத்தில் இருக்கிறது. சென்னை பல்கலைக்கழகம் 1927-ல் தொகுத்த தமிழ் அகராதியில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் சொற்கள் இருக்கின்றது. தமிழில் உள்ள அத்தனை சொற்களும் அதில் இடம் பெற்றிருக்குமா என்றால், நிச்சயம் இல்லை. இவ்வளவு வளமிக்க மொழியிலிருந்து நாம் அன்றாடம் பேச்சு வழக்கில் வெறும் 400 முதல் 500 சொற்களையே பயன்படுத்துகிறோம் என்ற ஆய்வுமுடிவும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

மக்களின் வாழ்க்கையே இலக்கியங்களாக எழுதப்பட்டு வரும் நிலையில் அகராதியில் இடம்பெறாத பல சொற்கள் புனைவுகளில் அந்தந்த பகுதி எழுத்தாளர்களால் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. தருமபுரி பகுதியை மையப்படுத்தி எழுதப்பட்டு பரவலான கவனம் பெற்ற படைப்புகள் குறைவு.

 வட்டார வழக்கு சொல் அகராதிகள் புதிதன்று. கி ரா வின் கரிசல் வட்டார வழக்கு அகராதி தொடங்கி பெருமாள் முருகனின் கொங்கு வட்டார சொல்லகராதி, கண்மணி குணசேகரன் நடுநாட்டு சொல் அகராதி என பல முன்னோடி முயற்சிகள் நடந்திருக்கிறது.

இந்நிலையில் தருமபுரி அரசு கலை கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் சிவப்பிரகாசம் அவர்கள் தொகுத்திருக்கும் தகடூர் வட்டார வழக்குச்சொல் அகராதி மிகுந்த கவனம் பெறுகிறது .

பேராசிரியர் இந்நூலில் ஏறத்தாழ 1500 சொற்களை தொகுத்திருக்கிறார்.

சொற்களுக்குறிய பொருளும்,  பொருத்தமான உதாரண வாக்கியங்களும் ஒரு புனைவை படிப்பது போன்ற சுவாரசியத்தை தருகின்றன.

மல்லாக்கியும், பலாசனையா, உமுக்கு, கிட்டவுட்டா, கொய்யகுத்தி போன்றபல சொற்களை நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்க வாய்ப்பு.

"திம்புதல்" என்ற சொல்லுக்கு தும்முதல் என்றும், "வேசேத்து" என்பதற்கு சலித்துப் போதல் என்றும் நூலில் உள்ளது. இதே மாவட்டத்தை சார்ந்த எனக்கு இவ்விரு சொற்களுமே புதிதாய் உள்ளது. இதிலிருந்தே இச்சொற்கள் தொகுத்து பதிவு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை உணரலாம்.

இது தொடக்கம்தான் . தொடர்ச்சியாக தருமபுரி கதை, பாடல்கள், பழமொழிகள் ,சொலவடைகள், நம்பிக்கைகள் இவற்றையும் தொகுக்கலாம்.

 பேராசிரியரின் மாணவர்கள் செய்வார்கள்.

இந்நூல் கல்விப் புலத்திலிருந்து வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பேராசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது.

 வாழ்த்துக்கள்...

நூல் தேவைக்கு..

96888 07312


Monday, January 15, 2024

தருமபுரி மண்ணும் மக்களும்

 

தருமபுரி மண்ணும் மக்களும்

த.பழமலய்



பதிப்புரை

           2010 சென்னை புத்தக கண்காட்சியில் தற்செயலாய் காணக்கிடைத்தது தருமபுரி மண்ணும் மக்களும். மிகுந்த ஆர்வத்தோடு வாங்கி வந்தவுடன் படித்துவிட்டேன். 50 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியூரிலிருந்து வந்த மனிதர்  தர்மபுரியை அங்குலம், அங்குலமாக பதிவு செய்திருக்கிறாரே என்று வியந்து போனேன். மாவட்டத்தின் தொல்லியல், வரலாறு, ஆளுமைகள்,இடங்கள் என இந்நூல் புதிய பார்வையை தந்தது. தர்மபுரி பற்றிய பல அரிய செய்திகளை முதன் முறையாக அறிந்து கொண்டதுடன்,

 இந்நூலைப் படித்த பிறகுதான் மன்றோ தூணையும்,  குளத்தையும் பார்த்தேன். பதிகால்பள்ளம் சென்று வந்தேன்.  கோபால் செட்டியார் என்ற ஆளுமையை அறிந்து கொண்டேன். 

அப்போதே தொல்லியல் அறிஞர் பார்த்திபனிடம் தொடர்பெண் பெற்று பழமலய் அவர்களிடம் பேசினேன்.

 "ரிட்டையர்மென்ட் பணத்தில் புத்தகம் போட்டேன். புத்தகம் வந்து ஐந்து வருடம் ஆகுது.தர்மபுரியில் இருந்து புத்தகத்தை பற்றி பேசும் முதல் ஆள் நீதான். பலருக்கும் இலவசமா கொடுத்தது போக இன்னும் இருநூறு பிரதிகள்  இருக்கும். கரையான் புடிக்கிறதுக்குள்ள வந்து எல்லாத்தையும்  எடுத்துட்டு போயிடு" என்று சலிப்பாக சொன்னார்.

  இந்நூலின் மூலம் தர்மபுரி  மாவட்டத்தை பற்றி முழுமையான சித்திரத்தை தந்திருக்கும் பழமலை அவர்களுக்கு    மரியாதை செய்யும்பொருட்டு ஒரு நிகழ்ச்சி நடத்தவேண்டும்  என்று நினைத்தேன். ஆனால் இதுவரை சாத்தியமாகாமலேயே போய்விட்டது.

   பிறகு   2020  ல் தர்மபுரி புத்தகத்திருவிழா நினைவு மலரில் இந்நூலைப் பற்றிய அறிமுகக் குறிப்பு வெளியிட எண்ணியபோது என்னிடம் இருந்த பிரதி தொலைந்து போயிருந்தது. பழமலை அவர்களை தொடர்பு கொண்டதில் கைவசம் பிரதிகள் எதுவுமில்லை என்றும் ஒருவேளை கோவையில் இருக்கும் மகளிடம் இருக்கலாம்  என்றார்.

   மலரில்  தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் வெளியிடப்பட்டது. அதைப் படித்த நண்பர்கள் பலரும் முழு நூலைப் படிக்க ஆர்வம் கொண்டனர். அதன் விளைவே தற்போது இந்நூலின் மறுபதிப்பு.

 போக்குவரத்து வசதிகள்  இல்லாத காலத்தில்  சொந்த ஆர்வத்தில் மாவட்டம் முழுக்க பயணம் செய்து ஆவணப்படுத்திய மதிப்பிற்குரிய கவிஞர் த.பழமலய் அவர்களுக்கு மாவட்ட மக்கள்  காலமெல்லாம் நன்றி உடையவர்களாக இருப்பார்கள். மகிழ்ச்சியோடு இந்நூலை மறுபதிப்பு செய்ய அனுமதியளித்த அவருக்கு நன்றி.

  நூலின் பிரதியை தந்துதவிய தென்றல்  பழமலை அவர்களுக்கும், பொருத்தமானதொரு அணிந்துரையை தந்து  சிறப்பித்திருக்கும் பேராசிரியர் ஆர்.சிவகுமார் அவர்களுக்கும் நன்றி.

     இந்நூல் எழுதப்பட்டு 50 ஆண்டுகள் கடந்துவிட்டன.  இடைக்காலத்தில் மாவட்டத்தின் சமூக, அரசியல், மக்கள் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இவற்றையெல்லாம்  அக்கறையோடு பதிவு செய்து ஆவணப்படுத்த நம்மில் யார் வரப்போகிறார்கள்?

 -இ. தங்கமணி ஆசிரியர்.