புறக்கணிப்புகள்தான் புதிய வாசல்களை திறக்கின்றன.
ஒரு மருத்துவரின் துணிவான தேடல்
எதுவும் இன்றி
டாக்டர்.சி .பழனிவேலு
ஜெம் பவுண்டேஷன் வெளியீடு
04222 325100
******
எளிய மனிதன் நான்
என் வாழ்க்கை மிகச் சிறியது
என் சாதனைகளும் சிறியவை
ஆனால் இந்த வாழ்விலும் சாதனைகளிலும்
நான் அடைந்த நிறைவு நிச்சயம் சிறியதல்ல.
நாமக்கல் மாவட்டம், மேல் சாத்தம்பூர் கிராமம். விவசாயம் சார்ந்த மக்கள். மழை பொய்த்து வறண்ட நிலத்தில் வாழ வாய்ப்பின்றி 1953 ல் மலேசியா செல்கிறது ஒரு குடும்பம். சென்ற இடத்திலும் நிம்மதி இல்லை. சொந்த மண்ணைத் துறந்து உறவினர்கள் நண்பர்களும் அருகில் இல்லாத சூழலில் துயரமாக கழிகிறது வாழ்க்கை. பெரியவர்களுக்கு ரப்பர் ,பாமாயில் தோட்டங்களில் கூலி வேலை. வீட்டில் எல்லோருக்கும் சமைத்துவிட்டு ஒரு தம்பி தங்கையையும் பராமரித்தவாறே அருகில் உள்ள பள்ளிக்கு சென்று ஆர்வத்தோடு படிக்கிறான் ஒரு சிறுவன்.
மருத்துவராக வேண்டும் என்பதே அவனது கனவு. ஆனால் ஐந்தாம் வகுப்பு முடித்த நிலையில் தொடர்ந்து படிக்க இயலாத வறுமை சூழல். படிப்பை நிறுத்திவிட்டு அருகிலுள்ள கள்ளுக்கடையில் உதவியாளாக வேலைக்கு சேர்கிறான் சிறுவன். அதிக வேலை ;குறைந்த ஊதியம், வேலையை விட வேண்டியதாகிறது. பிறகு ரப்பர் தோட்டங்களில் மூன்று ஆண்டுகள் உழைத்தவனுக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற ஆவல் துளிர்த்தபடியே உள்ளது.
எனவே குடும்பம் மலேசியாவிலேயே இருக்க, அம்மாவுடன் 1966 ல் தாயகம் திரும்புகிறான் . மலேசியாவில் படித்த ஐந்தாம் வகுப்பு இங்கே செல்லத்தக்கதாக இல்லை. வயதும் 17 ஆகி விட்ட நிலையில் இங்குள்ள பள்ளிகள் அவனை சேர்க்க தயாராக இல்லை. அவனிடம் பணம் இல்லை. எந்த அடையாளமும் இல்லை, ஆனாலும் முடங்கிப் போய்விடவில்லை. கடுமையான வயல் வேலைகளுக்கு மத்தியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கெல்லாம் சென்று சேர்த்துக்கொள்ள வேண்டுகிறான். எல்லாப் பள்ளிகளும் தங்கள் கதவுகளை மூடிக்கொண்டன. அவர்களுக்குறிய விதியைத் தாண்டி உதவ யாரும் தயாரில்லை.
இறுதியில் வையாபுரி என்று ஆசிரியரின் கருணையால் நல்லூர் கவண்டிபாளையம் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்து கொள்கிறான். பள்ளி நேரம் போக தோட்டத்து வேலை, ஆடு மாடுகளை பராமரிப்பது அருகில் உள்ள சந்தைகளுக்கு சென்று காய்கறிகளை விற்பனை செய்வது என்று கழிகிறது காலம். இடையில் மலேசிய கல்வித் தகுதியை மறைத்ததாக கூறி பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுத விடாமல் பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறான் . பல போராட்டங்களுக்குப் பிறகு பள்ளியில் சேர்ந்து மீண்டும் பத்தாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறுகிறான்.
இதுவரை நிராகரிப்பையும் பரிதவிப்பையும் மட்டுமே வாழ்க்கையில் சந்தித்து வந்த இளைஞன் பள்ளியின் தலைமை ஆசிரியர் சேதுராமன் அவர்கள் உதவியால் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி யு சி சேர்கிறான்.
நகரத்து சூழல்,மேல்தட்டு மாணவர்கள், ஆங்கிலத்திலேயே நடக்கும் வகுப்புகள் எனவே 100% உழைப்பை செலுத்தி வெற்றி பெற முனைகிறான் .
PUC யில் எல்லா பாடங்களிலும் சிறப்பு தகுதியுடன் தேர்ச்சி பெற்றிருந்தாலும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது சவாலாக உள்ளது. பெரும்பாலும் பெரிய இடத்து சிபாரிசு செய்பவர்களுக்கே இடம் என்ற நிலையில் இங்கும் அங்கும் அலைந்து சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் கிடைக்கிறது.மருத்துவராக வேண்டுமென்ற சிறு வயது கனவு பல்வேறு சவால்களுக்கிடையே நிறைவேறுகிறது.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பின்னாளில் உலகம் போற்றும் சாதனையாளராக வரப்போகும் மருத்துவர் சி.பழனிவேலு உருவாகிறார்.
மருத்துவ மாணவராக
புறக்கணிப்புகளையும் ஏமாற்றங்களையும் மட்டுமே சந்தித்தவர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியேனும் முன்னுக்கு வந்து விட வேண்டும் என்று உழைக்கிறார் பழனிவேலு.மருத்துவக் கல்லூரியில் மாணவர் சங்க செயலாளராக பேராசிரியர்களுடன் நெருங்கி பழகி பல ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை செய்கிறார். மருத்துவர் ரங்கபாஷ்யம் , மருத்துவர் உமாபதி போன்ற முன்னோடிகளை வழிகாட்டியாகக் கொண்டு கடுமையாக உழைத்து தேர்ந்த மருத்துவராக உருவாகிறார்.
கல்லூரி இறுதி ஆண்டில் தங்கப் பதக்கமும், கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில் நினைவு பரிசையும் , நீரிழிவு மற்றும் வளர்ச்சிதை மாற்றம் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக பதக்கத்தையும் வென்று மிகச்சிறந்த மாணவன் என்று அனைவராலும் பாராட்டப்படுகிறார். துடிப்பான மருத்துவராக வெளியே வருகிறார்.
மருத்துவப் பணி
சாதிக்கத் துடிக்கும் முயற்சியும், அடுத்தடுத்த நகர்வுளுக்கான தேடலும் மருத்துவர் பழனிவேலுவை தொடர்ந்து பல இடங்களுக்கு நகர்த்திச் செல்கிறது.மதுரையில் மருத்துவ மேற்படிப்பு எம் எஸ் முடித்த பிறகு இரண்டு ஆண்டுகள் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி.
பின்னர் இரைப்பை மற்றும் குடல் நோய்கள் தொடர்பான அறுவை சிகிச்சை பயிற்சியை புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நிறைவு செய்கிறார். தொடர்ந்து எம் சிஹெச் மேற்படிப்பு முடித்து
இரைப்பை மற்றும் குடல் நோய் அறுவை சிகிச்சை நிபுணராகிறார். கோவையில் மருத்துவ பணியை தொடங்குகிறார்.
அறுவை சிகிச்சையில் புதுமைகள்
பித்தப்பை, குடல்வாழ் போன்ற பிரச்சனைகளுக்கு வயிற்றை திறந்து அறுவை சிகிச்சை செய்வதே வழக்கமாக இருந்தது. இதனால் அறுவை சிகிச்சை முடிந்து பல நாட்களுக்கு நோயாளி இயல்புக்கு திரும்ப முடியாத நிலை இருக்கும். இந்நிலையில் சிறு துளைகள் வழியாக கேமராவையும் கருவிகளையும் செலுத்தி செய்யப்படும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை முறைகள் மேல்நாடுகளில் அறிமுகமாகியிருந்த நிலையில் அதில் பயிற்சி பெற்று லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையில் இந்திய அளவில் முன்னணி மருத்துவராக உருவாகிறார்.
கூடவே ஒரு மாத காலம் அமெரிக்கா சென்று முழுமையான பயிற்சி பெற்றதுடன் புதிய தொழில்நுட்பங்களையும் அறுவை சிகிச்சையில் புதிய செய்முறைகளையும் உருவாக்கி நமது திறமைகளை அவர்களுக்கு நிரூபித்துவிட்டு திரும்புகிறார்.
இந்தியா முழுவதிலுமிருந்து டாக்டர்கள் கோவைக்கு வந்து இவரிடம் லேப்ராஸ்கோபி பயிற்சி பெற்று செல்கிறார்கள். நாள்தோறும் தாமும் புதிதாய் கற்று மற்றவர்களுக்கும் கற்பித்து அறுவை சிகிச்சைகளில் மூழ்கிப் போகிறார் மருத்துவர் பழனிவேலு.
உலகின் தலைசிறந்த லேப்ராஸ்கோபி நிபுணராகவும் இரைப்பை மற்றும் குடல் நோய் துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் பல அறுவை சிகிச்சையில் புதுமைகளை புகுத்தியவராகவும் உள்ளார். வயிற்றில் ,உணவுக் குழாயில், இரைப்பை, கல்லீரல், கணையம் மற்றும் மலக்குடலில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளை அகற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை முறைகள் உலகிலேயே முதன்முறையாக இவரால் உருவாக்கப்பட்டவை.
இவர் உருவாக்கிய முறைகள் எளிமையானவை, குறைந்த கட்டணத்தில் செய்ய ஏற்றவை. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள டாக்டர்கள் பின்பற்றக் கூடிய விதத்தில் உள்ளூர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டவை.இவற்றை டாக்டர் பழனிவேலு செயல்முறை என்றே பல நாட்டு மருத்துவர்களும் பின்பற்றுகின்றனர்.
GEM -மருத்துவமனை
(Gastroenterology Medical centre and Hospital)
தனது துறையில் மேலும் மேலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ள 1991 ல் சிறிய ஒரு மருத்துவமனையை தொடங்குகிறார்.
அதுவே ஆசியாவிலேயே முதன்முறையாக இரைப்பை மற்றும் குடல் நோய் சிகிச்சைக்கான பிரத்தியேக மையமான ல் ஜெம் மருத்துவமனையாக 2001 உருவெடுக்கிறது.
இந்திய அளவில் 1000 லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகளை முதலில் செய்த மருத்துவமனை என்ற பெயரை ஜெம் மருத்துவமனை பெற்றதுடன் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையின் தலைக்கோயில் என கோவை பெயர் பெற ஆரம்பித்தது.
இது பற்றி மருத்துவர் பழனிவேல் அவர்கள் கூறுவது,
லேப்ராஸ்கோபிக் சிகிச்சை என்பது உயர் தொழில் நுட்பமாகவும் அதிக செலவு பிடிப்பதாகவும் இருந்தது. வெளிநாடுகளில் விலை உயர்ந்த கருவிகளை பயன்படுத்தியே செய்தனர். நான் அவற்றை தவிர்த்து விட்டு சிக்கனமான முறையில் நம் மண்ணுக்கு ஏற்ற விதத்தில் இதை மாற்றியமைக்க நினைத்தேன். எளிய குடும்பங்களுக்கும் பயன்படும் சிகிச்சையாக இதை உருவாக்க ஆசைப்பட்டேன். இதனால் ஏராளமான அறுவை சிகிச்சைகளை செய்து உலக சாதனைகள் புரிந்தேன்.
உலகின் அத்தனை அதிநவீன தொழில்நுட்ப கருவிகளும் நிறைந்ததாக ஜெம் மருத்துவமனை உள்ளது. முன்பெல்லாம் மேற்கத்திய நாடுகளில் அறிமுகமாகும் நவீன சிகிச்சை முறைகள் இந்தியாவுக்கு வர பல ஆண்டுகள் ஆகும். இப்போது உடனுக்குடன் ஜெம் மருத்துவமனை அறிமுகம் செய்கிறது.
நாங்கள் பெற்றிருக்கும் மருத்துவ அறிவை மற்ற டாக்டர்களும் பகிர்ந்துகொள்வதுடன் சமூகத்துக்கு தேவையான புதிய மருத்துவ தொழில்நுட்பங்களையும் அறுவை சிகிச்சை செயல்முறைகளை உருவாக்கி அர்ப்பணிப்புணர்வுடன் சேவை புரிகிறது
ஜெம் மருத்துவமனை.
முன்னேறிய நாடுகளில் உள்ளது போல இரைப்பை மற்றும் உணவுக் குழாய் சிகிச்சை, கல்லீரல் கணையம் மற்றும் பித்த நீர் குழாய் சிகிச்சை, பெருங்குடல் மற்றும் மலக்குடல் சிகிச்சை, உடல் மிகைபெறுமன் குறைப்பு அறுவை சிகிச்சை, கல்லீரல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, ஜீரண மண்டல மருத்துவ பிரிவு என ஒவ்வொன்றுக்கும் விரிவான தனித்துறை இருப்பதே மருத்துவமனையின் சிறப்பாகும்.
லேப்ராஸ்கோபி மிகைப்பருமன் குறைப்பு அறுவை சிகிச்சைக்காக ஜெம்மருத்துவமனை சர்வதேச ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே உயர் சிகிச்சை மருத்துவமனை ஆகும்.
இப்போது டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இரண்டு ஆண்டு பட்ட மேற்படிப்பும் ஜெம் மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.
250 படுக்கையில் கொண்ட மருத்துவமனையில் எளிய அடித்தட்டு மக்களுக்காக 15 படுக்கைகள் கொண்ட இலவச பொது வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை சார்பில் கிராமப்புறங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.நோய் அறிகுறிகள் கண்டறியப்படும் ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன.
அறுவை சிகிச்சைகளை நேரடியாக ஒளிபரப்பி செயல் விளக்கம் தரும் தொலை மருத்துவக் கல்வி வசதியும் ஜெம் மருத்துவமனையில் உள்ளது. இந்த இணைய வழி பயிற்சி மூலம் இங்கு நடைபெறும் அறுவை சிகிச்சைகளை உலகம் முழுக்க பல நாடுகளின் டாக்டர்கள் நேரலையில் பார்த்து பயிற்சி பெறுகிறார்கள் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய செய்தியாகும்.
கோவையை தொடர்ந்து தற்போது சென்னை,புதுச்சேரி, ஈரோடு, திருப்பூர், திருச்சூர் ஆகிய இடங்களிலும் ஜெம் மருத்துவமனையின் கிளைகள் உள்ளன.
லேப்ராஸ்கோபி, எண்டோஸ்கோபி மற்றும் ரோபாட்டிக் அறுவை சிகிச்சைகள் இணைந்த சிறப்பு மையங்களாக இவை உள்ளன.
ஆராய்ச்சி & பயிற்சி மற்றும் நூல்கள்
உலக அளவில் முக்கிய மருத்துவ ஆராய்ச்சி ஆய்விதழ்களில் இவர் எழுதும் கட்டுரைகள் மருத்துவர்களுக்கு வழிகாட்டியாக அமைகிறது. லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையில் 20 க்கும் மேற்பட்ட புதிய முறைகளை இவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைகள் தொடர்பான செயல்முறைகளை விவரித்து விரிவான விளக்கப் படங்களுடன் பல மருத்துவ நூல்களை எழுதியுள்ளார். இவை பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மருத்துவர்களுக்கு பாட நூலாக உள்ளது.
இவரது அறுவை சிகிச்சை தொடர்பான வீடியோ காட்சிகளும் மருத்துவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.
தொடர்ந்து அமெரிக்கா,இங்கிலாந்து, ஜெர்மன்,சீனா ,ரஷ்யா என முன்னணி நாடுகளுக்கும் சென்று புதுமையான பல லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைகளை செய்து காட்டி அங்கிருக்கும் டாக்டர்களுக்கு பயிற்சி தருகிறார். உலக அளவில் அறியப்பட்ட இந்திய மருத்துவராக உள்ளார்.
உலகின் பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராக இருந்து மருத்துவ சிகிச்சைகளைக் கற்றுத் தருகிறார்.
திரைப்பட நடிகர்களுக்கு உள்ளது போல ஒரு மருத்துவருக்கு ரசிகர் மன்றம் இருப்பது இவருக்கு தான்.
சிறப்புகள் அங்கீகாரங்கள்
மருத்துவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான டாக்டர் பி.சி.ராய் விருதினை இரண்டு முறை பெற்ற பெருமைக்குரியவர்.
பிரிட்டனின் Royal College of Surgeons வழங்கும் Fellowship ad hominem என்ற அரிய கெளரவத்தைப் பெற்ற இந்திய மருத்துவர்.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு மற்றும் செம்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. மலேசியா, பெரு என்று பல நாடுகளின் மருத்துவக்கல்வி நிலையங்கள் இந்த கௌரவத்தை அவருக்குத் தந்துள்ளன.புற்றுநோய் சிகிச்சையில் ஆற்றிய பங்களிப்புக்காக, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்.
இந்தியாவின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
நல்லதொரு குடும்பம்
மருத்துவர் பழனிவேலுவின் சாதனைகளுக்கெல்லாம் பின்னணியில் அவரது குடும்பம் உள்ளது. வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தொடக்க காலத்தில் தொடர்ச்சியான பல நெருக்கடிகளிலும் மனம் கோணாமல் கணவருக்கு துணை நின்றவர் மனைவி ஜெயா. இப்போது ஜெம் மருத்துமனையை நிர்வகித்து வருகிறார். உடல் மிகை பருமன் குறைப்பு சிகிச்சை பிரிவின் தலைவராக சிறப்பாக செயல்பட்டு வரும் மகன் பிரவீன் ராஜ், மற்றும் மருமகன் செந்தில்நாதன் என இவரது குடும்பமே மருத்துவமனையை தாங்கி நிற்கிறது. நெருக்கடியான மருத்துவப் பணிகளுக்கிடையேயும் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் என்பதற்கு இவரது வாழ்க்கை முன்னுதாரணமானதாக உள்ளது.
எதுவும் இன்றி
ஆர்வமும் தொடர் முயற்சியும் தேடலும் இருந்தால் ஒரு எளிய மனிதன் எந்த உயரத்திற்கும் செல்ல முடியும் , சமூகத்திற்கு பணியாற்றிட முடியும் என்பதற்கு மருத்துவர் பழனிவேலு அவர்களின் வாழ்க்கை மிகச்சிறந்த சான்றாகும்.
இந்நூலை தன் வரலாற்று நூல் என்று சுருக்கிவிட முடியாது. நவீன மருத்துவ அறிவியலின், குறிப்பாக லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையின் வளர்ச்சியையும் சாத்தியங்களையும் விவரிக்கும் நூலாகவும் உள்ளது. GUTS என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வெறும் பெருமைகளை மட்டும் பேசாமல் தனது வறுமையையும் பல இடங்களில் தான் பெற்ற சிபாரிசுகளையும், தனது சாதனைகளுக்கு காரணமான ஆசிரியர்களையும் மிக நேர்மையாக நன்றியோடு பதிவு செய்திருக்கிறார். அதுவே இத் தன்வரலாற்று நூலை உயிரோட்டமுள்ளதாக்குகிறது.
சாதாரண வாசகனுக்கு மிகப்பெரிய ஊக்கத்தைத் தரும் நூலிது.
மருத்துவ மாணவர்களுக்கு பல புதிய வாசல்களை திறக்கும். மருத்துவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும் கையாளவும் தூண்டுகோலாக இருக்கும். அனைவரும் படிக்க வேண்டிய நூலாகும் இது.
Comments