Thursday, October 23, 2025

உன் யாதுமாகிய நான் (தமிழாக்க கவிதைகள்) க.மோகனரங்கன்


 

உன் யாதுமாகிய நான்

(தமிழாக்க கவிதைகள்)

க.மோகனரங்கன்

 தமிழினி வெளியீடு 



ரசனை

மஹ்மூத் தர்வீஷ்


ரயிலில் 

நமது இருக்கைகளை 

நாம் மாற்றிக்கொண்டோம்.

நீ ஜன்னலருகே 

இருக்க விரும்பினாய்; 

நானோ உன்னைப் பார்த்துக்கொண்டிருக்க விரும்பினேன்.


***


பரிசு

மௌலானா ரூமி


உனக்குத் தகுந்த

ஒரு பரிசைத் தேடிக் கொண்டுவருவதற்காக.

நான் எவ்வளவு சிரமப்பட்டேன் என்று

உனக்குத் தெரியாது.

எதுவும் உகந்ததாகத் தோன்றவில்லை.

கனிமச் சுரங்கம் ஒன்றிற்குத் தங்கத்தையும்

 அல்லது

 கடலுக்கு நீரையும் சுமந்து வருவதால் என்ன பயன்?

என் இதயத்தையோ 

அல்லது ஆன்மாவையோ 

தருவதிலும் யாதொரு பயனுமில்லை! ஏனென்றால்

ஏற்கெனவே இவை உன்னிடம்தான் உள்ளன.

எனவே உனக்கொரு

 கண்ணாடியைக் கொண்டு வந்துள்ளேன்.

உன்னைப் பார்த்து

என்னை நினைவுகொள்.


***

பிம்பம்

சியோ-நி


ஓடும் நீரின் மேல்,

 தன் நிழலைத் துரத்துகிறது 

தட்டான் பூச்சி


***

ஒளியுவகை

கேன் யூசெல்


புராணத்தின்படி ஒவ்வொரு ஆளுக்கும் தனியே ஒரு சூரியன் இருக்கிறது.

நீங்கள் தினமும் காலையில் கண்விழிக்கையில் காண்பதல்ல;

அது,

உங்களுக்குப் பிரியமானவர்கள்

சிரிக்கும்போது பிறப்பது.


***


காட்சி

இசூமி ஷிகிபு


அவ்வளவு அவசரமாக 

எங்கே புறப்பட்டுப் போகிறாய்? 

எங்கு சென்றாலும் 

நீ காணப்போவது

அதே நிலவைத்தான்!


***


கீழ்ப்படிதல்

பீட்டர் செர்ச்சஸ்


உன் வலது கையை உயர்த்து என்றாள்.

வலது கையைத் உயர்த்தினேன்.

உன் இடது கையை தூக்கு என்றாள்.

இடது கையைத் தூக்கினேன்.

என் இரண்டு கைகளும் மேலே இருந்தன.

வலது கையை கீழே விடு என்றாள். கீழே விட்டேன்.

இடது கையை கீழே போடு என்றாள். நான் செய்தேன். 

உன் வலது கையைத் தூக்கு என்றாள். நான் கீழ்ப்படிந்தேன். 

உன் வலது கையை கீழே வை 

நான் செய்தேன். 

உன் இடது கையை உயர்த்தவும்.

 நான் அதை உயர்த்தினேன். 

உன் இடது கையை கீழே போடவும் நான் செய்தேன். 

நான் அங்கேயே நின்றேன்.

அமைதி.

இரண்டு கைகளையும் கீழே இறக்கி.

அவளுடைய கட்டளைக்காகக் காத்திருந்தேன்.

சற்று நேரம் கழித்து

 நான் பொறுமையிழந்து, 

அடுத்து என்ன என்றேன்.

இப்போது உத்தரவிடுவது உன் முறை என்றாள்.

சரி என்றவன் சொன்னேன்.

இப்போது என் வலது கையை உயர்த்தச் சொல்.


***


தெளிவு

வூ சின்


ஒரு பெயருடன்

ஒரு உருவத்தோடு எழுதப்பட்ட 

ஒரு கதையைக் கொண்டு நிகழ்த்தப்படும் 

வாழ்க்கை என்கிற இந்நாடகத்தில் ஒவ்வொரு உயிரும் 

காலத்தில் ஒரு துளி.

யாரும்l

தமக்கான பெயரை வடிவத்தை நாடகத்தின் கதையைத் தானே தேர்ந்தெடுக்கவில்லை.

இருப்பினும்,

ஒவ்வொருவரும் தனது விதியின் எஜமானர் தான்தான் என நம்புகிறார்கள்.

அவர்களின் பார்வை தெளிந்தவுடன்,

அவர்களும் சிரிப்பார்கள்.


***


போர்

சார்லஸ் சிமிக்


முதல் பனிப்பொழிவின் மாலையில் ஒரு பெண்ணின் நடுங்கும் விரல் பலியானவர்களின் பட்டியலில் கீழிறங்கிச் செல்கிறது. 

வீடு குளிர்ந்திருக்கிறது.

பட்டியல் நீளமாகவும் இருக்கிறது.

நம் அனைவரது பெயர்களும் 

அதில் சேர்க்கப்பட்டுள்ளன.


***


பேதம் ஏதுமில்லை

ஷெல் சில்வர்ஸ்டைன்


ஒரு வேர்க்கடலைபோலச் 

சிறியதாக இருப்பினும் 

ஒரு பூதத்தைப்போலப் 

பெரியதாகத் தோன்றினும் 

விளக்கை அணைத்ததும்

 நாம் அனைவரும்

 ஒரே அளவுடையவர்கள்தாம்.

சுல்தானைப் போன்ற பணக்காரராயினும் 

பூச்சியைப் போன்ற 

ஏழையாயினும்

 விளக்கை அணைத்ததும் 

நாம் அனைவரும் ஒரே மதிப்புடையவர்கள்தான்.

சிவப்பு கருப்பு அல்லது இளஞ்சிவப்பு மஞ்சள் அல்லது வெள்ளை நிறம் எதுவாயினும்

 விளக்கை அணைத்ததும் 

நாம் அனைவரும் 

ஒரே மாதிரியாகவே காட்சியளிக்கிறோம்

எனவே எல்லாவற்றையும் 

சரிசெய்ய வழி இருக்கும். 

விளக்கை அணைத்திட 

கடவுள்தான் 

தன் கையை நீட்ட வேண்டும்!


***


கனவு

சுவாங் சூ


நான் ஒரு பட்டாம்பூச்சியாக ஆகிவிட்டதாகக்

கனவு கண்டேன்,

வானத்தில் பறந்து திரிந்தேன்;

பிறகு விழித்தெழுந்தவன் ஆச்சரியப்படுகிறேன்:


இப்போது நான்

ஒரு பட்டாம்பூச்சி என்று கனவு கண்ட மனிதனா

அல்லது நான் ஒரு மனிதன் என்று

கனவு காண்கிற பட்டாம்பூச்சியா?


***


ரசமாற்றம்

ஓஷன் லுங்


"என்னைச் சந்திப்பதற்கு முன் நீ என்னவாக இருந்தாய்?

"நான் மூழ்கிக்கொண்டிருந்தேன் என்று நினைவு.

'இப்போது நீ என்னவாக இருக்கிறாய்?"

"தண்ணீராக."


***


உன்னை விட

மௌலானா ரூமி


எல்லாவற்றையும் சுவைத்தேன்.

உன்னை விடச் சிறந்தது எதையும்

 நான் காணவில்லை.

கடலுக்குள் மூழ்கித் தேடிய போதும் உனக்கு நிகரான ஒரு முத்தை நான் காணவில்லை.

எல்லா மூடிகளையும் திறந்தேன், ஆயிரம் ஜாடிகளில் இருந்து சுவைத்தேன்.

ஆயினும்

 என் உதடுகளை நனைத்து என் உள்ளத்தைத் தூண்டியதென்னவோ இதழமுதைத் தவிர வேறெதுவுமில்லை.


***


பொதுவான கதை

எல்.ஆர். நாஸ்ட்


உன் கதையைச் சொல்.

உரக்கக் கத்து.

எழுது.

தேவைப்பட்டால் கிசுகிசுக்கவும் செய்.

ஆனால் அதைச் சொல்.

சிலருக்கு அது புரியாது.

சிலர் அதை முற்றிலுமாக நிராகரிப்பார்கள்.

ஆனால் பலர் 

அதற்காக நன்றி கூறுவார்கள்.

அதன் பிறகு 

அந்த மாயாவினோதம் நடக்கும்.

ஒவ்வொன்றாகக் குரல்கள் 

ஒலிக்கத் தொடங்கும்

 'நானும் கூட' என்று கிசுகிசுப்பார்கள்.

உனது இனம் கூடும்.

நீ ஒருபோதும்

 மீண்டும் தனியாக உணரமாட்டாய்.


***


உன்னிலிருந்து உன்னிடம்

ஜைனப் ஹத்துன்

நான் ஒரு நீரூற்று.

நீயே என் நீர்.

நான் உன்னிலிருந்து

உன்னிடம் பாய்கிறேன்.

நான் ஒரு கண்.

நீயே என் ஒளி.

நான் உன்வசமிருந்து

உன்னைப் பார்க்கிறேன்.

நீ என் வலதுமல்ல

இடதுமில்லை.

நீயே என் கையும் காலும்.

நான் ஒரு பயணி.

நீயே என் பாதை.

நான் உன்னிலிருந்து

உன்னிடம் செல்கிறேன்.


***

எல்லாமுமாகிய உலகு

உமர் கய்யாம்


மக்கள்

சொர்க்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.

இங்கேயன்றி சொர்க்கம் வேறெங்குமில்லை.

மக்கள்

 நரகத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் இங்கேயன்றி நரகம் எங்குமில்லை.

இனிவரும் மனிதர்களும் பேசுவார்கள் எதிர்வரும் வாழ்வை. 

ஆனால் அன்பே!

இங்கே அல்லாமல் 

வேறெங்கும் இல்லை 

வாழ்க்கை.


***


எனது விதி

சார்லஸ் புகோவ்ஸ்கி

நான் நரியைப் போல, வேட்டையாடப்படுபவர்களுடன் 

சேர்ந்து ஓடுகிறேன்.

இப் பூமியில் 

மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக நான் 

இல்லாமல் போனாலும், உயிரோடிருக்கும்

 அதிர்ஷ்டசாலி...

நிச்சயமாக.

நான்தான்.

-------+----

No comments:

Post a Comment