Saturday, April 5, 2025

வீரான்குட்டி கவிதைகள்

வீரான்குட்டி கவிதைகள் 

 மலையாளத்திலிருந்து தமிழில்:சுஜா 

தன்னறம் வெளியீடு

9843870059



கேள்:

கல்லிடம் கேள்
 எவ்வளவு காத்திருந்து ரத்தினமாகியதென நீர்த்துளியிடம் விசாரி
 எத்தனை காலக் காத்திருப்பு முத்தாவதற்கென 
உதடுகள் இருந்திருந்தால் 
அவை சொல்லியிருக்கும் 
அன்புடன் ஒரு கை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் என்று.
*

குறைந்து குறைந்து

காணும் முன்பு 
எத்தனை பெரியவராய் இருந்தோம் பரஸ்பரம் நாம்!
கண்டுகழித்ததும் சிறிதானோம் 
பேசத் தொடங்கியபோது அற்பமானோம் இனி ஒன்றாக நடக்கத் தொடங்கினால் குறைந்து குறைந்து 
இருக்கிறோம் என்றே 
சொல்ல முடியாத அளவுக்கு 
முழுதுமாய்த் தீர்ந்துவிடுவோமோ
 நாம் ஒருவருக்கு ஒருவர்?
கடவுள் காணக் கிடைக்காதது சாலவும் நன்றல்லவா?
*


ரூமிக்கு

காயங்கள் பட்டாலென்ன 
உதடுகளுடன் எப்போதும் வாசிக்க முடிந்ததல்லவா?
புல்லாங்குழல் பாடுகிறது.
*

சொல்

சொல்
இரண்டுபேர் 
காதலிக்கத் தொடங்கும்போது
அவர்களை மட்டுமாக்கி
 சுற்றியுள்ள உலகம் 
சட்டென்று எங்கே போய்த் தொலைகிறது?
*

யாரும் காணாதவாறு

யாரும் காணாதவாறு 
நீ செய்து கொண்டிருப்பது அனைத்தும் தெரியும் எனக்கு
யாரும் கேட்க முடியாத மொழியில் 
அதைச் சொல்ல முடியாததன்
 வருத்தம்தான் எனக்கு
*

வீணாக

சுயரூபம்
நீட்டியும்
குறுக்கியும் 
ஆடும் நிழலின்
விளையாட்டை
அற்பமாக
நினைக்க வேண்டாம்.
எப்போதும்
ஒருவனின்
கீழேயே
இருக்க வேண்டி வந்ததன்
துக்கத்தை
மறப்பதற்கு
அது
முயற்சி செய்து கொண்டிருக்கலாம்
*

நமக்கிடையில் இந்த மரம்

நமக்கிடையில் இருக்கும் இந்த மரம் ஊமையென்றுதானே எண்ணுகிறாய்?
கூர்ந்து கேள் 
பிரியப்பட்ட யாருடனோ 
அது பூக்களால் பேசுகிறது 
காய்களால் வாக்குறுதியளிக்கிறது
 அந்தத் தளிரிலைச் சிவப்பு 
வீணென்றா நினைக்கிறாய்? 
அப்படி அந்த மரம் ஊமையென்றால் 
காதலே அதற்குப் பழியேற்கட்டும்.
*


ஒவ்வோர் இலையும்

நாம் இங்கிருந்துகொண்டு 
பூமியின் எல்லா மரங்களிலும்
 எத்தனை இலைகள் 
என்று எண்ணத் தொடங்குகிறோம் இலைகள் எவ்விதத்திலும் ஒத்துழைப்பதில்லை 
அவற்றிற்கு அதொன்றும் முக்கியமில்லை.
ஒவ்வோர் இலையும் 
அதனதன் அதீத தனிமையில், உதிரும்போதுதான் நாமதைத் தெரிந்துகொள்கிறோம் அவ்வளவுதான்.
*

கலந்துவிட்ட வெளிச்சங்கள்

முன்பொரு முறை
நாம்
ஒருவர்க்கொருவர் 
பரிசளித்துக்கொண்ட விளக்குகளில் உன்னுடையது, என்னுடையது என 
வேர்பிரித்தெடுக்கச் சாத்தியமில்லை 
பிரியும்போது
எனில்
அவற்றின் ஒன்றாய்க் கலந்துவிட்ட வெளிச்சத்தை 
எப்படி வேறுவேறாக்குவது? கொண்டுபோவது?
*

அறியாமல்

நேரம் மெல்ல விடிவது காண 
காத்து விழித்திருந்தீர்கள் 
காண முடியவில்லை 
நேரம் விடிந்துவிட்டது

பூ மலர்வதைக் காண 
கண் இமைக்காமல் இருந்தீர்கள். 
காணவில்லை 
பூ மலர்ந்துவிட்டது.

இப்படியே போனால் 
நீங்கள் கண்ணில் எண்ணெய் ஊற்றி பார்த்துக்கொண்டேதான் இருக்கப்போகிறீர்கள். 
அதனிடையில்
 எப்போதாவது 
உங்களுக்குத் தெரியாமல் நானும் இல்லாமல் போய்விடுவேன்.
*


சுவாதீனம்

செத்தவரை
கொண்டுபோகும் கூச்சல்
எங்களை
சட்டென்று பெரியவராக்கியது

ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம்
என்றொரு குரல்
சைக்கிள் பெல்லோடு
எதிரே வந்து
எங்களைச் சின்னஞ்சிறு
குழந்தைகளாக்கும் வரை.
*

வெள்ளைக் கொக்கின் படம்

மேகத்தில்
யானையின்
முயலின்
வடிவங்களைக் கற்பனை செய்வேன்.

சில நேரங்களில் குருவியை
வீட்டின் அருகில் உள்ள
வயல் கரையில்
ஆழத்தை உற்று நோக்கியபடி
அமர்ந்திருக்கும் கொக்கின் படத்தை வைத்திருந்தது குளம்.

கோடையில் குளம் வற்றியது பிறகு கொக்கைக் காணவேயில்லை அந்தப் படத்திற்கு என்ன ஆகியிருக்கும்?

இப்போது
சில நேரங்களில்
மேகத்தில்
என்னால் பார்க்க முடிகிறது
வெள்ளைக் கொக்கின் படம்.
*


No comments:

Post a Comment