நிறைகுளம் - நாவல்
பெ.மகேந்திரன்
மின்னங்காடி பதிப்பகம்
78240 49160
பேய்ந்து விளையுது மலையாள பூமி
பாய்ந்து விளையுது தஞ்சாவூர் பூமி
காய்ந்து விளையுது கரிசல் பூமி.
நான் சிறுவனாக இருக்கும்போது பொடிமட்டை என்ற பெரியவர் ஊரில் இருந்தார். அவர் இயற்பெயர் யாருக்கும் தெரியாது .
நல்ல பெரும்பாடி ஆள். எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையில் இருப்பார். பாக்கெட் நிறைய காகிதங்களும் ஒரு முரட்டு பேனாவும். கையில் காபிதூள் நிறத்தில் ஒரு தோல்பையும் அவரது அடையாளம்.
நான் இல்லாவிட்டால் மொரப்பூருக்கு ரயில் வந்திருக்காது, நான் சொல்லி தான் அரூர் சர்க்கரை ஆலை வந்தது என்பார். வாணியாறு அணை கட்ட மனு எழுதி இருக்கிறேன் என்பார். அன்றாடம் மனு எழுதுவதே அவரது வேலை.
கரிசல்காடு படைப்பாளிகள் விளையும் மண். அம்மக்களின் கனவுகளை, எதிர்பார்ப்புகளை காலந்தோறும் படைப்புகளாக எழுதி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் நிறைகுளம் கிராமம்.
கரிசல் மண்ணின் சம்சாரிகள் வானம் பார்த்த பூமியில் நம்பிக்கையை மட்டுமே முதலீடாக கொண்டு விவசாயம் செய்கிறார்கள். வானம் பார்த்த பூமியில் விவசாயத்துக்கு மட்டுமின்றி குடிநீருக்கே போராடும் நிலை உள்ளது
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம் வழியாக அருப்புக்கோட்டை, சாயல்குடி, கடலாடி வரையுள்ள பகுதிகளுக்கு நீர் பாசனத்திற்காகவும் குடிநீர் வசதிக்காகவும் அழகர் அணை என்ற ஒரு திட்டம் ஆங்கிலேயர் காலத்திலிருந்து பேசு பொருளாக உள்ளது. சுதந்திரம் பெற்று எத்தனை ஆட்சி மாற்றம் வந்தாலும் இது நிறைவேறியதாக இல்லை.
இந்த பின்னணியில் கரிசல் மக்களின் வாழ்வியலை நுட்பமாக பேசும் படைப்பு இது.
கடந்த கால முக்கிய நிகழ்வுகளை புனைவுகளில் பொருத்தமாக கையாள்வது நல்ல யுக்தி. அந்த அடிப்படையில்
தனுஷ்கோடி புயலில் குடும்பத்தை இழந்து அனாதை சிறுவனாக நிறைகுடம் கிராமத்தில் தஞ்சம் புகுந்து மக்களோடு நிறைந்துவிட்டவர் ஆதிமூலம்.
ஊர் மக்களால் நம்பிக்கையோடு வழிபட்ட பிள்ளையார் திடீரென்று களவாடப்படுகிறார். பிள்ளையார் இல்லாத ஊரில் மழை இல்லை, நல்லது கெட்டது இல்லை என்று புலம்பி மீண்டும் நிறுவ முயலும் ஊர்மக்கள்.
ஒரு குடம் குடிநீருக்காக அள்ளாடும் கிராமத்தின் வழியே நகரத்தின் குடிநீர் தேவைக்காக பதிக்கப்படும் பெரிய குழாய். தண்ணீர் செல்லும் சத்தத்தை காது கொடுத்து ஏக்கத்தோடு கேட்கும் மக்கள்.
இவை எல்லாவற்றுக்கும் தீர்வாக மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் ஆற்றில் அணை கட்டி நீர்ப்பாசன வசதி ஏற்படுத்த மக்களை திரட்டி தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் இளைஞர் ராமகிருஷ்ணன்.
மக்கள் பிரச்சனைகளை படைப்புகளில் கையாள்வது சவாலானது. அதை திறம்பட செய்திருக்கிறார் நூலாசிரியர்.
மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை தற்காலத்தோடு பொருத்தி எழுதியிருப்பது சிறப்பு .
நூலாசிரியரே நல்ல ஓவியர் என்பதால்
ஆங்காங்கே தனது சிறு தூரிகைகளாலும் நாவலை அழகுபடுத்தியிருக்கிறார்.
கரிசல் சம்சாரிகளின் வாழ்க்கையை எழுத கிரா வின் பேனா மகேந்திரன் அவர்களின் கைக்கு வந்திருக்கிறது. இன்னும் நிறைய எழுதுவார்.
Comments