நேர்மை படும் பாடு
ஞான ராஜசேகரன்
டிஸ்கவரி புக் பேலஸ்.
ஞான ராஜசேகரன் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சி பணி அலுவலர், கலை இலக்கிய ஆர்வலர் ,திரைப்பட இயக்குனர் என பன்முகம் கொண்டவர்.
அவர் தனது அரசுப் பணி அனுபவங்களை விவரிக்கும் 32 சுவையான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.
நூலின் தலைப்பே சொல்வது போல தனது பணிக்காலத்தில் இயன்றவரை நேர்மையாக கடமையை செய்தவர் ஞானசேகரன். அவ்வப்போது எதிர்கொண்ட சவால்களையும் நெருக்கடிகளையும் சுவைபட கூறி இருக்கிறார். அதே நேரத்தில்
நேர்மை என்ற பெயரில் தேவையற்ற கெடுபிடிகளை செய்யும் மனிதாபிமானமற்ற அலுவலர்களின் செயல்பாடுகளையும் விமர்சிக்கிறார்.
கீழ்கண்ட வரிகளே நூலாசிரியரின் ஆளுமையை நிரூபிப்பதாக உள்ளது.
"ஐஏஎஸ் தந்த நேர்மை திமிரை வெளிகாட்டி அரசியல்வாதிகளுடன் ஆன உறவை நாசமாக்கிக் கொள்வதால் மக்களுக்கு நமக்கோ யாதொரு பலனும் இல்லை.
என் சர்வீஸில் பலமுறை அரசியல் தலைவர்கள் சிபாரிசு செய்ய லிஸ்ட்டோடு என்னிடம் வந்திருக்கிறார்கள்.அவர்கள் எப்போதும் தொண்டர்கள் கூட்டத்துடன்தான் வருவது வழக்கம். சிபாரிசு செய்ய வரும் அரசியல் தலைவரின் கவலை எல்லாம் அவர்கள் கொண்டு வருகிற சிபாரிசுகளை பற்றி இருப்பதில்லை, தொண்டர்களின் முன் அதிகாரி தன்னை கௌரவமாக நடத்த வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களின் பிரதான பிரச்சனையாக இருக்கும். இது போன்ற சமயங்களில் தலைவர்களை அன்புடன் வரவேற்று நன்றாக உபசரித்து நான் என்னால் ஆனதை முயற்சி செய்கிறேன் என்று சொல்லி அவர்கள் தரும் லிஸ்டை வாங்கிக்கொள்வேன். அவர்களும் மன நிறைவோடு சென்று விடுவார்கள். அவர்கள் தந்த லிஸ்ட்டை நான் செயல்படுத்தியதே இல்லை. அவர்களும் அதைப்பற்றி விசாரிக்க திரும்ப வந்ததும் இல்லை"
கேரளா மாநிலத்தில் ஆட்சிப் பணி அதிகாரியான இவருக்கு மெச்சத்தகுந்த நேர்மையான முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள் . இந்நூல் வழியாக அறியப்படும் கருணாகரன்,உமன் சாண்டி, ஏகே அந்தோணி ஆகிய முதல்வர்கள் இப்படியும் அரசியல் தலைவர்கள் இம்மண்ணில் இருக்கிறார்களா என்று வியக்க வைக்கிறார்கள்.
கேரள மாநிலம் கல்வி அறிவும் அரசியல் முதிர்ச்சியும் நிறைந்த சமூகம்.
திருச்சூர் ,பாலா மாவட்ட கலெக்டர், திரைப்பட தணிக்கை அதிகாரி என பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்தது சவாலானது.
சான்றாக சில அனுபவங்கள்..
மாவட்ட ஆட்சியராக ராஜசேகரன் உள்ளார். பாரதப் பிரதமர் திருச்சூர் வந்திருக்கிறார்.உடன் அவரது குடும்பமும் . ஆட்சியர் தலைமையில் பாதுகாப்பு மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் முனைப்போடு செய்யப்பட்டிருக்கிறது. அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரதமர் டெல்லி செல்ல தயாரான நிலையில் காஞ்சி சங்கரச்சாரியார் மரணம் அடைந்த செய்தி வருகிறது. பிரதமர் காஞ்சிபுரம் செல்ல நினைக்கிறார். துக்க நிகழ்ச்சிக்கு செல்ல நூல் புடவை இல்லையே என்ற கவலை பிரதமரின் மனைவிக்கு. நகரில் உள்ள பெரிய கடை நள்ளிரவு திறக்க செய்யப்படுகிறது. பாதுகாவலர்களள் சூழ மணி நேரம் செலவிட்டு திருப்தியாக திரும்பி வருகிறார். பாதுகாவலர்கள் சொன்ன செய்திதான் அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு நூல் புடவை கூட எடுக்கவில்லை. விலை உயர்ந்த 5 பட்டுப்புடவைகளை மட்டுமே வாங்கிக் கொண்டார், என்பதுதான் அது. அரசு செலவு தான் என்பதை தனியாக சொல்ல வேண்டியது இல்லை.
இந்திய அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கிறது. கூட்ட அரங்கின் முன் போராட்டம் நடத்த எதிர்கட்சிகள் தயாராகின்றன. கேரளாவில் இது வாடிக்கை . தேசிய அளவில் நடக்கும் கூட்ட அரங்கத்துக்கு முன் போராட்டத்தை தவிர்க்க என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார் ஆட்சியர்.
கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் அனைவரும் முந்திய நாள் மதியமே வந்து ஹோட்டலில் தங்கி இருக்கிறார்கள் .அவர்களிடம் இன்று மாலையே கூட்டத்தை நடத்தி விட்டால் என்ன என்று ஆலோசிக்கிறார். வந்தவர்களுக்கு நல்ல யோசனையாகப்படுகிறது. மறுநாள் கடவுளின் தேசமான கேரளாவில் சுற்றுலா சென்று திரும்பலாம் என்ற எண்ணத்தில் அனைவரும் பச்சை கொடி காட்டுகிறார்கள். இரவே கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மறுநாள் போராட்டக்காரர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்.
கலை இலக்கியத்தில் ஆர்வம் கொண்வரான நூலாசிரியர் செய்தி மக்கள் தொடர்பு துறையில் செயலாளராக இருக்கிறார் .மணிப்பூர் மாநிலத்தின் புகழ்பெற்ற கண்ணையா குழுவினரின் மூன்று நாள் நாடக நிகழ்வை திருவனந்தபுரத்தில் ஏற்பாடு செய்கிறார்.
அனுமதி இலவசம்.
முதல் நாள் நாடகம் துவங்கிய நிலையில் 20 பேர் மட்டுமே பார்வையாளர்கள். 250 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய ஹாலில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிறைய விளம்பரமும் செலவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடகத்தை ரத்து செய்து விடலாமா என்று யோசிக்கிறார். திடீரென்று ஒரு மாற்று சிந்தனை.
மறுநாள் நாடகம் பார்க்க கட்டணம், முன்பதிவு செய்ய வழிமுறைகளையும் செய்தித்தாளில் விளம்பரம் செய்கிறார்.
உடனே அரசியல்வாதிகள்,உயர் அதிகாரிகளிடமிருந்து விஐபி பாஸ் கேட்டு தொடர்ந்து கோரிக்கைகள் வருகிறது. மறுநாள் மாலை அரங்கம் நிறைந்ததால் நின்று கொண்டே நாடகம் பார்க்க வேண்டிய சூழல்.
அதிகாரத்தை பயன்படுத்தி இலவச பாஸோடு வந்தவர்கள் தான் அனைவரும். டிக்கெட் வாங்கி வந்தவர்கள் ஒருவரும் இல்லை என்பதை வேடிக்கை.
ஆட்சி பகுதியில் உள்ள ஒரு கிராமத்து தேவி திருவிழா. திருவிழாவின் இறுதி நாளில் நீண்ட ஊர்வலம் புறப்பட்டு அப்பகுதியில் உள்ள பெரிய மசூதியின் வழியாக செல்லும். காலங்காலமாக அமைதியாக நடந்து வந்த இந்நடைமுறை சமீபடத்திய ஆண்டுகளில் பதட்டமான சூழலிலை உருவாக்குகிறது. மசூதியில் பாங்கு ஓதும் நேரத்தில் ஊர்வலம் செல்பவர்கள் கூச்சலிடுவதும் கல்வீச்சும் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் தேர் திருவிழா நடத்துவது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இம்முறை ஆட்சியாளர் நம்மவர். பிரச்சனை இல்லாமல் ஊர்வலத்தை நடத்தி முடிக்க விரிவான ஏற்பாடுகளை போலீஸார் செய்திருந்தாலும் பதற்றமான சூழல் உள்ளது. இவை எதுவும் இல்லாமல் எளிமையாக எப்படி பிரச்சனையை தவிர்த்தார் என்பது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு.
அதிகாரத்தையும் போலீஸ் படையையும் நம்பியே நிர்வாகம் செய்ய நினைப்பவர்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் வழிகாட்டியாக அமையும்.
அரசு அதிகாரிகளுக்கு இந்நூல் வழிகாட்டும். பொதுமக்களுக்கு அரசு எந்திரத்தின்மேல் நம்பிக்கையையும் மரியாதையையும் விதைக்கும். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.
No comments:
Post a Comment