Saturday, October 18, 2025

படுபட்சி- டிலுக்ஸன் மோகன்



 படுபட்சி
                                                       தன் வரலாற்று நாவல் (Auto fiction)                                                டிலுக்ஸன் மோகன்





இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ளது செங்கலடி.                                                ஒரு பக்கம் இலங்கை ராணுவத்தின் முகாமும் மற்றொரு பக்கம் விடுதலைப் புலிகளும். எப்போதும் இடைவிடாது கேட்கும் வெடி சத்தத்தில் பிறந்து வளர்ந்தவர் மோகன். 

முதல் புஷ்பக விமானத்தை இராவணன்தான் உருவாக்கினான் என்று புராணக் கதை பேசி வரும் நாட்டில், இளம் வயதிலேயே மகனை விமானியாக்க வேண்டும் என்று விரும்பி வளர்த்த அப்பா. 

அந்த ஊக்கத்தால், "எனக்கு சிறிய வயதிலேயே இரண்டு விடயங்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டன".

முதலாவது,                                                                                                                   "எக்காரணம் கொண்டும் போரிடும் எந்த தரப்பின் பக்கத்திலும் நான் சேரக்கூடாது".

 இரண்டாவது,                                                                                                                                "இடர், தடை, இழப்பு, வலி, வாதை என எது வந்தாலும் நான் அவற்றை எதிர்கொண்டும் கடந்தும் கண்டிப்பாக விமானப் பொறியியல் படிக்க வேண்டும். நான் ஒரு விமானத்தை உருவாக்க வேண்டும். இலங்கையில் இதுவரை ஒரு விமானம் கூட தயாரிக்கப் பட்டதில்லை. இலங்கையின் முதலாவது விமானத்தை நான் உருவாக்குவேன்", என்கிறார் மோகன்.

இலங்கையின் முதல் விமானத்தை உருவாக்க நினைத்த தமிழ் இளைஞனின் கனவையும், அக்கனவு சுக்குநூறாக உடைந்த வலியையும் பேசுகிறது படுபட்சி.

விடுதலைப் புலிகளுக்கு விமானம் தயாரித்ததாகக் கூறி அவனையும் அவனது குடும்பத்தையும் துடைத்தொழிக்க முயற்சிக்கிறது சிங்கள ராணுவம். பல ரணங்கள்,  கொடுமைகள்.

இலங்கையிலிருந்து தப்பி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று, அகதியாகச் சூறாவளிக் காற்றில் சிறு துரும்பாய் அலைக்கழியும் துயர வாழ்க்கையை, இந்த தன் வரலாற்று நாவல் (Auto fiction) பேசுகிறது. துயரத்தாலும் இலட்சியத்தாலும் வதைகளாலும் நிரம்பிய, புனைவிலும் சொல்ல முடியாத வாழ்க்கை அது. 

அந்த சித்திரவதை நிறைந்த வாழ்க்கையை எப்படி விளக்கினாலும் மற்றவர்களால் ஓரளவுக்குத்தான் புரிந்துகொள்ள முடியும். அதை அனுபவித்து, உயிரோடிருப்பதே பெரிய விசயம்.

"தமிழன் என்கிற ஒரே காரணத்துக்காக ஓர் இளைஞனின் கனவை, ஆசையை, ஒரு நாடு நிராகரித்ததைத் தாங்க முடியவில்லை. எனக்கு என்ன நடந்தது என்பதன் மூலம், தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதை உலகுக்குச் சொல்லும் முயற்சிதான் இது" என்கிறார் மோகன்.

உலகின் பூர்வகுடிகள் யார்?, இலங்கைத் தமிழர் - இஸ்லாமியப் பூசல்கள், இலட்சியக் கனல்களுக்கடையே துளிர்க்கும் காதல் என ஆயிரம் பக்கங்கள் விரித்து எழுத இந்நாவலில் இடமிருக்கிறது. இருப்பினும் கூர்மையான மொழியில் கச்சிதமான வடிவத்தில் நிறைவாக வந்திருக்கும் படைப்பு இது.

அடுத்தவர் வலியை உணர அவராகவே மாறினால்தான் முடியும்.        மோகனின் எழுத்து நம்மை மாற்றியிருக்கிறது.


 படுபட்சி

 டிலுக்ஸன் மோகன்

கருப்புப் பிரதிகள் வெளியீடு, சென்னை.

விலை: ரூ. 250

தொடர்புக்கு: 94442 72500



No comments:

Post a Comment