(கவிதை தொகுப்பு)
த. பொன்னரசன்
மகிழினி பதிப்பகம்
90951 67007
உனக்கான காத்திருப்பில்
வனாந்திரப் பெருமழையில்
முழுவதும் நனைந்துவிட்டேன்
ஆங்கே தலைதுவட்ட
தேவையோர் வண்ணத்துப்பூச்சி...
口
மிச்சமற்று எரித்துவிடு சகியே நம்
மீகாமம் சாகட்டும்
口
நடுநிசியில் நீரிறைக்கும் சப்தம்
விழிகளில் தொங்கும்
நிறைகுடங்களில் தளும்பும் மனம்...
口
உனக்கும் எனக்குமான ஆயத்தொலைவு -
ஒரு கற்பனை நகர்தலுடன் சுழியமாகிறது...
口
என்னைத் திறப்பதற்கான கடவுச்சொல்
என்னில் வேர்களாய் வியாபித்திருக்கும் நீயேயறிவாய்
அந்த வேர்ச்சொல்
உன் பெயர்ச்சொல் என்றறிய
ஏனிந்த தாமதம்...
口
கையை விட்டு நழுவிய
கண்ணாடிச் சில்லுகளிலிருந்து
பிறப்பெடுக்கும் எனக்கான பிம்பத்தில்
ஓராயிரம் முறை
உன்னையே குவிக்கிறது என் விழி...
口
வாழ்வின் எந்த விசையும்
என்னை ஈர்த்துவிடவில்லை...
எனினும்
இவ்வாழ்வு தட்டுப்படுமென
தடவுகிறதென் கைகள்..
口
திசை வேறு
பயணம் ஒன்று
மனதிற்கு
மைல்கற்களில்லை...
口
பட்டால் தெரியும் என்பது
பட்டுப்போன பின்னே தெரிகிறது...
மரணம் மனிதனைத் திருத்துகிறது...
口
இருகைகளின் இணைவினை
இவ்விருக்கை இன்னமும் ஈரப்படுத்தி வைத்திருக்கிறது...
என்றைக்காவது அப்பூங்கா
செல்ல நேரிட்டால்
ஒருநிமிடம்
அவ்விருக்கையில் அமர்ந்துவிட்டுப்போ...
அதன் ஆயுளாவது நீளும்....
口
வெளியில் உலவும் யாவரின் மூச்சையும்
பருகாமல் உயிர்வளர்ப்பதெங்கனம்?
பதில் வாய்க்காத ஒற்றைக்கேள்விதான்
அறம் எனப்படுவது யாதெனில்?...
口
தாவர வாழ்வு
தன்னறம் போதித்தது
எனக்கு...
口
மலர்தலின்
ஆழம் கூடக்கூட
அழுத்தத்தைக் கூட்டுகிறது கடல்...
ஆழம் கூடக்கூட
அழுத்தத்தைத் தணிக்கிறது காதல்...
口
குத்திக்கிழியுறும்
யுத்தியறியும்
கத்திதனைப்
பொத்திப் பொலிவுற
வைத்தெந்தன்
புறமுதுகில் புகுத்திவிட்டாய் எனினும்
எனக்குக் கண்கள் பிடரியிலே...
口
மந்தையில் சேராத என்னை
சந்தையில் சேர்த்ததில்
என்ன விந்தையுள்ளது தந்தையே?...
口
ஆவி பறக்க காத்திருக்கிறேன் நான்
பனிக்கூழென பனியாவியாய் கவிந்திருக்கிறாய் நீ
தட்ப வெப்பம்
வேறு வேறாகிலும்
நமக்கான ஆவி
ஒன்று போலத்தானே பரவிக் கூடுகிறது
口
காற்றின் கரைசலினூடே
உன் உயிரை உமிழ்நீரோடு
குழைத்து தூதனுப்பினாய்...
வண்ண ஒளிர்வினில் பறந்துவரும்
சோப்புக்குமிழ்களாக மெல்லத்தரையிறங்கும்
"காற்றிட்ட முட்டைகளை" நான் கைகளில் ஏந்துகையில் ..
உடைந்து சிதறிய குமிழ்களில்
உன் ஈரம் பூசியிருந்த என்னுயிர்க்கு
உரையெழுத உன்னைவிட்டால் யாருமில்லை...
口
Comments