கற்பது உலகளவு
கல்வியாளர் தா.நெடுஞ்செழியன்
விகடன் பிரசுரம்.
கல்விதான் சமூகத்துக்கு வேர். ஒரு தேசம் கல்வியை எவ்வாறு புரிந்து கொள்கிறது, அடுத்த தலைமுறைக்கு எப்படி கல்வியை எடுத்து செல்கிறது என்பதில்தான் அத்தேசத்தின் வளர்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும் அடங்கி இருக்கிறது.
கல்வி என்பது ஓர் இனிமையான பயணம். ஒரு குழந்தை பிறந்ததும் எப்படி இயல்பாக மொழியை கற்றுக் கொள்கிறதோ அப்படி ஒரு நிகழ்வுதான் கல்வியும்.
இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி அறிவு பெற்று மனிதவளம் மிகுந்திருப்பது தமிழகத்தில்தான். கல்வியை முறைப்படுத்தி தகுந்த தரத்தில் வழங்கினால் தமிழகம் உலகத்தை வழிநடத்தும் வல்லமை பெறும். புதிய தொழில்நுட்பங்கள் வரவர அதற்கு ஏற்ப திட்டங்களையும் கற்பித்தல் முறைகளையும் உருவாக்க வேண்டும்.
மாணவர்கள் உலகளாவிய வாய்ப்புகளுக்கு எப்படி எல்லாம் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். பொருத்தமான கல்வியை எவ்வாறு தேர்வு செய்வது என்றெல்லாம் விரிவாக பேசுகிறது இந்நூல்.
நூலாசிரியர் தா.நெடுஞ்செழியன் அவர்கள் முன்னணி கல்வி ஆலோசகர்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டியவர். அரசின் பல்வேறு கல்விக் குழுக்களில் உறுப்பினராக அங்கம் வகித்தவர். ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை சார்ந்து ஐந்து நூல்களை எழுதிய அனுபவம் மிக்கவர்.
நமக்கு உயர்கல்வி என்றாலே மருத்துவமும் பொறியியலும் மட்டும்தான்.
மற்ற துறைகள் எல்லாம் வாய்ப்புகள் கிடைக்காத மாணவர்கள் வேறு வழியின்றி ஒதுங்கும் இடமாக உள்ளது.
இப்படி பெற்றோர்கள்,மாணவர்கள் கவனிக்காத பலதுறை படிப்புகள் விரிவாக இந்நூலில் கவனப்படுத்தப்பட்டுள்ளது.
தனது நீண்ட அனுபவத்திலிருந்து ஒவ்வொரு துறையிலும் உள்ள வாய்ப்புகள், அத்துறை சார்ந்த படிப்புகள் அவற்றை வழங்கும் கல்வி நிறுவனங்கள், நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித் தொகைகள் என முழுமையான வழிகாட்டுதலை வழங்குகிறார் நூலாசிரியர்.
வேளாண்மை ,உணவு சார்ந்த படிப்புகள், சட்டம் , வைல்ட் லைஃப் படிப்புகள்,டிசைனிங், விண்வெளி துறையில் இருக்கும் படிப்புகள், பால் தொழில்நுட்பம், மெட்டாலர்ஜி, ரயில்வே துறை சார்ந்த படிப்புகள்,சுற்றுலா சார்ந்த படிப்புகள், சினிமா, பார்மசி எக்கனாமிக்ஸ், துணை மருத்துவம், மீன்வளம், வணிக்கல்வி, சைக்காலஜி புள்ளியியல்,மக்கள் தொகை, ஃபேஷன் டிசைனிங் என 56 அத்தியாயங்களில் தகவல் களஞ்சியங்களாக உள்ளது. இதில் உள்ள பல தகவல்கள் வேறு எங்கும் கேள்விப்படாதது.
உயர் கல்வியில் சேர நடத்தப்படும் JAM,JGEEBILS,CUET,ICAR,GATE,JEE போன்ற பல தேர்வுகள் தொடர்பான விரிவான தகவல்களும் உள்ளது.
வெறும் துறை சார்ந்த வழிகாட்டி நூலாக மட்டுமல்லாமல் இந்நூலில் பேசப்படும் கல்வி சிக்கல்களும், தீர்வுகளும் முக்கியமானது.
சான்றாக, தமிழகத்தில் காந்திகிராம பல்கலைக்கழகம் மற்றும் அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகங்கள் இரண்டிலும் நமது மாணவர்கள் மட்டுமே பயின்று வந்தனர். தற்போது ஒன்றிய அரசு நடத்தும் CUET தேர்வின் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என மாற்றி விட்டார்கள். இத்தேர்வில் நம் மாணவர்கள் கவனம் செலுத்தாத நிலையில் பிற மாநிலத்தவரே முற்றிலும் ஆக்கிரமிக்கும் நிலை வந்துவிட்டது. நாம் முன்னணி பல்கலைக்கழகங்கள் இரண்டை இழந்தோம்.
அத்துடன் மருத்துவ கவுன்சிலிங் வஞ்சிக்கப்படும் மாணவர்கள்,
மருத்துவப் படிப்பை நீட் தரமாக்குகிறதா?,
கோச்சிங் சென்டர்...அக்கிரமங்களின் கதை,
நீட் தரத்தை குழி தோண்டி புதைக்கும் பர்சன்டையில் முடிவு,கிராமப்புற மாணவர்களை வஞ்சிக்கும் மத்திய அரசு தேர்வு, நீட் ரிசல்ட் நிறைய சந்தேகங்கள்...
போன்ற தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் சமூக அக்கறையோடு கல்வியில் செயல்படும் அரசியலை அலசுகிறது.
நூலில் இடம் பெற்றுள்ள நாட்டின் பல முன்னோடி கல்வி நிறுவனங்களின் வரலாறு படிக்கும்போது பெருமிதம் தருவதாக உள்ளது.
ஒவ்வொரு தலைப்பிலும் தரப்படும் புள்ளிவிவரங்களும் முக்கியமானவை, மதிப்பு மிக்கவை.
மாணவர்களுக்கு வாய்ப்புகளை சுட்டிக்காட்டி செல்வதோடு மட்டுமல்லாமல் தனது வழிகாட்டுதலால் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் பெயர்களை குறிப்பிட்டு சொல்வது மேலும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.
மொத்தத்தில் இது மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கும், பெற்றோர்களுக்கு தெளிவூட்டும், ஆசிரியர்களுக்கு புதிய வாசல்களை திறக்கும். அனைவரும் கைக்கொள்ள வேண்டிய தமிழின் முழுமையான உயர்கல்வி வழிகாட்டி நூல் இது.