படித்துறை இலக்கிய விருது - பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டதையொட்டி வெளியிடப்பட்ட
பாரதி கிருஷ்ணகுமார்
எனும்
சொல்லேர் உழவன்
சிறப்பு மலரில் வெளியாகி உள்ள எனது கட்டுரை
இதயத்தில் கலந்த பேரோசை
1990 களின் துவக்க ஆண்டுகளாக இருக்கலாம். ஒரு டிசம்பர் 31. திருவண்ணாமலையில் தமுஎச கலை இரவு. நள்ளிரவு 12 மணிக்கு மேடையில் ஓர் உயர்ந்த மனிதர் முழங்கிக் கொண்டிருக்கிறார். மார்கழி மாத கடும்பனி, குளிர். மைதானம் நிரம்பிய கூட்டம் நிலை மறந்து கேட்டுக் கொண்டிருக்கிறது.உணர்ச்சியோடு பேசப்பேச பெருக்கெடுத்த வியர்வையில் அவர் ஆடை தொப்பர நனைந்துவிட்டது. இப்படியே நனைய.. காய தொடர்ந்தது இடிமுழக்கம். அப்போதுதான் முதன் முதலில் பாரதி கிருஷ்ணகுமாரை பார்க்கிறேன்.
மதவாதம், சிறுபான்மை போன்ற சொல்லாடல்கள் புழங்க ஆரம்பித்திருந்த நேரம்.இரண்டு மணி நேரம் நீடித்த பேச்சை,"தன் குஞ்சை கவ்வ வரும் பருந்தை துரத்தும் கோழியின் ஆவேசம் வன்முறை என்றால், இந்த வன்முறை நாடெங்கும் விரைந்து பரவட்டும்" என்று முடித்தார். 30 ஆண்டுகளுக்குப் பிறகும் வார்த்தை தவறாமல் காதில் ஒலிக்கிறது அவரது குரல். காரணம் அது இதயத்தில் கலந்த பேரோசை.
அதன் பிறகு ஓசூர்,திருப்பூர் என்று எங்கு கலை இரவு நடந்தாலும் தவறாமல் போய்விடுவேன் பாரதி கிருஷ்ணகுமாருக்காகவே.பின்னர் அறிமுகமாகி, நட்பாகி அவரின் அன்புக்கு பாத்திரமானதும், பிரியமான பிகே வானதும் தனிக்கதை.
அரசியலும், ஆன்மீகமும் முழங்கி வந்த மேடைகளில் டால்ஸ்டாய், செகாவ் ,பாரதி என்று பிகே 40 ஆண்டுகளாக நிகழ்த்தி வருவது தன்னிகரில்லாத சொற்போர். பாரதியையும், ஜீவாவையும், ஜெயகாந்தனையும் காணாத குறையை தமிழ் சமூகம் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் உருவத்தில் பார்க்கிறது.
எந்த நாற்காலி கனவும் இன்றி மைக் முன்னால் அதிகம் தமிழ் பேசிக் கொண்டிருப்பவர் இவராகத்தான் இருக்கும். ஒவ்வொரு மேடையிலும் பிகே நிகழ்த்துவது ஒரு அறப்போர். அவரது குரலும் உடல் மொழியும் எப்போதும் எதிரில் இருப்பவரின் மனசாட்சியை தொட்டு பேசுபவை.
இத்தனை ஆண்டுகளில் எத்துறை விற்பன்னரும் நீர்த்துப் போய் இருப்பார் அல்லது காணாமல் போயிருப்பார். யூடியூப் போன்ற காட்சி ஊடகங்கள் இருக்கும் நிலையில் ஒரு பேச்சாளனுக்கு மேடையை கையாள்வது பெரும் சவால். ஆனாலும் ஒவ்வொரு மேடையையும் அவர் புதிதாக கையாள்வதை கண்டு வியந்து போயிருக்கிறேன். பேச்சாளராக அறியப்பட்டாலும் அடிப்படையில் அவர் ஒரு இலக்கியவாதி. தொடர்ந்த வாசிப்பும், எழுத்துமே அவரது பேச்சின் உரம்.
அதுமட்டுமன்றி பேச்சை ஒரு தவமாக கருதுபவர் அவர். ஒவ்வொரு கூட்டத்திலும் பேச தேர்வுக்கு தயாராகும் மாணவனை போல முன்னதாக விரிவான குறிப்புகள் எடுத்து வைத்திருப்பார். கூட்டம் தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக போய் சேர்வதில் குறியாக இருப்பார். ஒவ்வொரு மேடையையும் இன்றுதான் புதிதாக பேசப்போவதைப்போல ஒரு பதற்றத்தில் இருப்பதையும் கவனித்திருக்கிறேன்.
பிகேவிடம் எனக்கு பிடித்தது முற்போக்கு மேடைகளிலும் பேசுவார் , மறுநாளே கம்பன் கழக மேடைகளிலும் முழங்குவார். துருப்பிடித்துப் போன கம்பன் கழக மேடைகளை தன் பேச்சால் தொடர்ந்து உயிர்ப்பித்து வருகிறார். அவர் அளவுக்கு கம்பனில் தோய்ந்து பேசவும், எழுதவும் செய்பவர் இந்த தலைமுறையில் இல்லை என்றே நினைக்கிறேன். "கவிச்சக்கரவர்த்தியின் பணிவு" நூலே அதற்கு சான்று. அதுபோலவே அவர் வள்ளலார் பேச கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
பேச்சாளராக மட்டுமின்றி "அப்பத்தா" சிறுகதை தொகுதி மூலம் எழுத்தாளராகவும், "அருந்தவப்பன்றி" என்ற பாரதி ஆய்வு நூலின் மூலம் நுட்பமான ஆய்வாளராகவும் தன்னை நிறுவிக் கொண்டவர்.
கட்சி, தொழிற்சங்கம் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு களப்பலியான படைப்பாளர்களுள் பிகேவும் ஒருவர். தொடக்க காலத்தில் பாண்டியன் கிராம வங்கி ஊழியராக நீண்ட தொழிற்சங்க பணிகளில் ஈடுபடாமல் இருந்திருந்தால் எழுத்திலும் அவர் மேலும் பல சாதனைகள் நிகழ்த்தி இருக்கக்கூடும். அவர் எழுதி வரும் "சிறு சேமிப்பு கணக்கு" தொடர் தொழிற்சங்கவாதிகளுக்கு ஒரு பாடநூலாகும்.
ஆவணப்பட இயக்குனராக அவரது கவனம் எப்போதும் சமூகத்தின் வலியை பார்ப்பதாகவே இருப்பதால் திரைத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
"ராமையாவின் குடிசை" மற்றும் "வாச்சாத்தி" படங்கள்தான் சொந்த மண்ணில் மக்கள் பட்ட வேதனையை அடுத்த தலைமுறைக்கு சொல்லும் ஒரே ஆவணம். வாச்சாத்தி கிராமத்தில் தங்கி பாதிக்கப்பட்ட மக்களோடு உரையாடி அவர் ஆவணப்படம் எடுத்து 15 ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். கடந்த ஆண்டு வாச்சாத்தி சம்பவம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் கோவையிலிருந்து கிளம்பி வாச்சாத்தி வந்தவர் அதிகாலையில் எனக்கு தொலைபேசினார். அதுதான் பிகே. பாதிக்கப்பட்டவர் வலியிலும், மகிழ்ச்சியிலும் தோள் கொடுக்க வேண்டும் என்ற உன்னத அன்பின் விளைவு அது.
பேச்சை போலவே அவரது கையெழுத்தும் தனித்துவமானது. அபூர்வமாக அவர் எழுதிய ஓரிரு கடிதங்களை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். எனது பிரியமான எழுத்தாளர், தனுஷ்கோடி ராமசாமி போலவே பிகேவின் கையெழுத்தும் அன்பையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கும்.
வெளியில் இருந்து பார்க்கும்போது கடுமையானவராக தெரிந்தாலும் நாடறிந்த ஆளுமை என்ற இடைவெளி இல்லாமல் நெருக்கமாக பழகி உரையாடும் பண்பாளர்.
தனது நீண்ட பயணத்தில் அடுத்த தலைமுறை பேச்சாளர்களை இனங்கண்டு ஊக்குவிக்கவும் அவர் தயங்கியதே இல்லை.தருமபுரி புத்தகத் திருவிழாவில் பேச ஆற்றல்மிக்க புது முகங்களை கேட்பேன். அவரது பரிந்துரையில் இராஜபாளையம் உமாசங்கர் , தாமல்.கோ சரவணன் ஆகியோர் எங்கள் மேடைகளை அலங்கரித்தார்கள்.
பிகே பேச்சை கேட்க பல இடங்களுக்கு பயணித்த காலம் மாறிவிட்டது. இப்போது உடனுக்குடன் அவரது பேச்சின் youtube link மகன் அனுப்பித் தருகிறான். எனது பேரனும் அனுப்புவான்.