Friday, April 3, 2026

சேலம் - வரலாற்றின் அடையாளங்கள்


 

சேலம் - வரலாற்றின் அடையாளங்கள். 

ஜே.பர்னபாஸ்

சேலம் வரலாற்றுச் சங்கம் வெளியீடு 

9865976424

-------

2008 ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் 15 நாட்கள் பயணம் செய்தோம்.கல்கத்தா, சுந்தரவனக் காடுகள், டார்ஜிலிங் என முழுமையாக திட்டமிட்ட பயணம் .

ஆனால் இப்போது நினைவிலிருப்பது திட்டத்தில் இல்லாமல் தற்செயலாக கல்கத்தாவில் மேற்கொண்ட (walking tour) நடை உலாதான் .

உள்ளூர் வரலாறில் ஆர்வமுள்ள அலோக் சத்ரபதி என்பவர் பல ஆண்டுகளாக வார இறுதி நாட்களில் நடத்தும் நடைபயணம் அது.

 தண்ணீர் பாட்டில், தொப்பியோடு இளங்காலையில் 15 பேர் உற்சாகமாக நடையை தொடங்கினோம். எங்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்.

சுதர் தெருவில் தொடங்கி மார்க்கெட்,இந்தியன் மியூசியம், பார்க் தெருவில் கல்லறைத் தோட்டம்,வில்லியம் கோட்டை, ஈடன் கார்டன் மைதானம், ஷாஹித் மினார்,திப்பு சுல்தான் மசூதி,ராஜ் பவன் என்று நடந்து ஹூப்ளி ஆற்றில் படகுப் பயணத்தோடு முடிந்தது.

வழியெங்கும் காலம் கடந்து வரலாற்றின் தடயங்களாக நிற்கும் கட்டிடங்கள், சிலைகள், கல்வெட்டுகள் கல்லறைகளை கவனப்படுத்தி விரிவான தகவல்களை அறிய முடிந்தது. ஓரிடத்தை அதன் வேரிலிருந்து அறிந்து கொண்ட அனுபவம்.

 சேலம் வரலாற்றின் அடையாளங்கள் நூலை வாசிக்கும் போது கல்கத்தாவின் மரபு நடை நினைவுக்கு வந்தது.

சேலம் மாநகரின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழுமையாக ஆராய்ந்து மாவட்டத்திலுள்ள முக்கிய வரலாற்று சின்னங்களையும் சேர்த்து 400 பக்கங்களில் தொகுத்திருக்கிறார் பர்னபாஸ் அவர்கள்.

 சில துளிகள்..

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் உள்ள பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் உள்ள செலநாடு என்ற குறிப்பே சேலம் பெயருக்கு ஆதாரமாக உள்ளது என்பதை அட்டை படமே வெளிப்படுத்துகிறது. 

1950 ஜனவரி 26 இந்தியா குடியரசான நாளில் இல் நிறுவப்பட்டஅசோகர் ஸ்தூபி.

1875 ல் கட்டப்பட்டு 150 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் CSI கிறிஸ்து நாதர் ஆலயம். அந்த வளாகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பொருள்கள். 

1860 இல் உருவாக்கப்பட்ட பழைய சேலம் மாவட்ட ஆட்சியரகம் பற்றிய வரலாற்று செய்திகளும் அதில் இடம்பெற்ற நினைவு சின்னங்களும். தற்போதைய

மாவட்ட ஆட்சியராக வளாகத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள்.

1860இல் ராபர்ட் ப்ரூஸ் பூட் என்ற சர்வேயரால் சேலம் நகரில் திரிகோண நில அளவை தொடங்கப்பட்டது. அதனைக் குறிக்கும் ஒரு ராஜமுட்டு (Royal bench mark).

1757 இல் திப்புசுல்தான் கட்டிய சேலம் ஜாமியா மஸ்ஜித். இதில் திப்பு இருமுறை தொழுகை நடத்தியிருக்கிறார்.

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜா ராணி தெப்பக்குளம்.

சேலத்தின் அடையாளமாக இருந்த மாடர்ன் தியேட்டரின் வரலாறு 

தாரமங்கலத்தில் உள்ள எண்கோண வடிவ குளம்.

மேட்டூர் நீர்த்தேக்கத்தால் அழிந்து போன கிராமங்கள், நந்தி சிலை, தேவாலயம் .

வரலாற்று சிறப்புமிக்க சங்ககிரி மலைக்கோட்டை மற்றும் ஆத்தூர் கோட்டை. 

பௌத்தம் செழித்திருந்தமைக்கு அடையாளமாக மாவட்டத்தின் பல இடங்களிலும் உள்ள வரலாற்றுத் தடயங்கள்.

தலைவெட்டி முனியப்பன் கோயிலாக மாற்றப்பட்ட புத்தர் சிலை.

சேலம் ஏற்காட்டில் பின்னணியில் இருந்த ஆங்கிலேயர்களின் வரலாறு.

சேலம் லண்டன் மிஷன் அமைப்பின் வரலாறு, சந்தித்த சோதனைகள், சவால்கள் சாதனைகள். புகழ்பெற்ற சேலம் லண்டன் மிஷன் உயர்நிலைப்பள்ளியின் வரலாறு.

போன்ற தகவல்கள் எங்கும் காணக் கிடைக்காதவை. 

 நூறாண்டுகளுக்கு முன்னால் சேலம் சுகவனேஸ்வரர் கோயில் பகுதியிலிருந்து டவுனுக்கு செல்ல திருமணிமுத்தாற்றின் படித்துறையில் இறங்கி ஆற்றுநீரில் நடந்துதான் செல்ல வேண்டும் என்பதை நம்பமுடிகிறதா?

 இந்த சிரமத்தை போக்க குஜராத்தி வணிகரான திரு கிருஷ்ண தாஸ் தேவ் சந்த் சேட் என்பவர் 1923 இல் கட்டிய பாலம் தான் கஸ்தூரிபாய் காந்தி பாலம். இந்த செய்திகளை கொண்ட ஆங்கிலக் கல்வெட்டை தற்போதும் காணலாம்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சேலம் ஜமீன்தாராக இருந்தவர் ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் பிஷர் (1805-1867). அவருக்கு சேலம் பகுதியில் ஒரு லட்சத்து இருபத்தி ஐயாயிரம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாம். ஏற்காட்டில் காப்பி தோட்டம் பருத்தி ,அவுரி , இண்டிகோ விளையும் தோட்டங்களும் உண்டு. அத்துடன் காபித்தூள் மற்றும் வெடியுப்பு தயாரிப்பு என்று தொழிலில் கொடி கட்டி பறந்திருக்கிறார். பெருஞ்செல்வம் ஈட்டிய அவர் சுற்றுப்பகுதி மக்கள் நலனுக்காக சாலை வசதி, கால்வாய்கள் வெட்டுவது, குடிநீருக்காக கிணறுகள் வெட்டி தருவது என்று பல நன்மைகளையும் செய்திருக்கிறார். இந்தியாவிலேயே ஒரு ஐரோப்பியர் ஜமீன்தாராக இருந்தது இவர்தான். 

இவர் தனது எஸ்டேட் மேனேஜராக இருந்த ஒரு இஸ்லாமியரின் அழகிய மகள் குருபீபீ மீது காதல்வயப்பட்டு மணம் புரிந்திருக்கிறார். குழந்தைகளை இங்கிலாந்துக்கு இங்கிலாந்தில் படிக்க வைத்திருக்கிறார்கள். 

 பிஷர் உயிரோடு இருக்கும்போதே தனது அன்பு மனைவி இறந்தால் இஸ்லாமிய முறைப்படி கல்லறை அமைக்க நிலமும் நிதியும் ஒதுக்கி வைத்திருந்தார்.1874 இல் மறைந்த குருபீபீ அம்மையாரின் கல்லறை சேலத்து தாஜ்மஹாலாக சேலம் அம்மாபேட்டையில் உள்ளது. சமயங்களைக் கடந்த இவர்களின் காதல் வாழ்க்கை வரலாற்றில் நிலைத்திருக்கிறது.

200 ஆண்டுகளுக்கு முன்பு கம்பீரமாக திருமணிமுத்தாற்றின் மேற்கு கரையை ஒட்டி அமைந்திருந்த சேலம் கோட்டையின் சுவடுகள் தற்போது எதுவும் இல்லை. ஹைதர் அலியும், திப்பு சுல்தானும், ஆங்கிலேயர்களும் கட்டியாண்ட கோட்டையை பர்னபாஸின் எழுத்து துல்லியமாக நமக்கு காட்டுகிறது.

சேலம் பகுதியில் கல்வி ,மருத்துவம் பரவலாக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள ஆளுமைகள் வரலாறும் நூலில் உள்ளது.

சேலத்தில் இருந்து தமிழ் தொண்டாற்றிய ஆங்கிலேயர்கள் மற்றும் நமது நாட்டவர்களை பற்றிய விரிவான விவரங்களும் உள்ளது.மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் 12 ஆண்டு காலம் சேலம் கலைக் கல்லூரியில் பேராசிரியராக இருந்திருக்கிறார். அதுவே அவரது தமிழ் பணியின் உச்சம் என்பதையும் அறிய முடிகிறது.

சேலத்து செம்மல் என்று அழைக்கப்படும் கே டி பால் 1876 ல் பிறந்தவர்.மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். அகில இந்திய ஒய்எம்சிஏ அமைப்பின் சிற்பியாகவும் கிராம மறு சீரமைப்பு திட்டத்தின் தந்தை எனவும் கருதப்படுகிறார்.தென்னிந்திய திருச்சபை சி எஸ் எப் ஐ என்ற மாபெரும் கிறிஸ்துவ தேவாலய அமைப்பு உருவாக காரணமாகவும் இருந்திருக்கிறார். நாடறிந்த தேசிய தலைவராக இருந்தவர் தற்போது ஒரு தெருவுக்கு பெயராக இருக்கிறார்.

இறை பணிக்காக வந்து வெயிலில் வதங்கி மக்களுக்கு சேவையாற்றிய மடிந்து சேலத்து கல்லறைகளில் துயிலும் பல ஆங்கிலேயர்களைப் பற்றிய குறிப்புகளை வாசிக்கும்போது மனம் கணக்கிறது.

நினைவு சின்னங்களைப்பற்றிய பற்றிய விரிவான தகவல்கள் படங்களோடு தரப்பட்டிருப்பது சிறப்பு. அவற்றை பாதுகாக்க தொடர்ந்து முயற்சித்து வரும் சேலம் வரலாற்றுச் சங்கத்தையும் , அதன் பொதுச்செயலாளர் ஜே.பர்னபாஸ் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

எல்லா ஊரிலும் இதுபோன்ற வரலாற்று சின்னங்கள் இருக்கிறது. அவற்றை கவனித்து ஆவணப்படுத்த பர்னபாஸ்கள் இல்லை.

பாதுகாக்க வேண்டிய இந்த நூலை பரிசளித்த வரலாற்று ஆசிரியர் மதிப்பிற்குரிய இடைப்பாடி அமுதன் அவர்களுக்கு நன்றி !










No comments:

Post a Comment