சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் பாகம் - 2
மதுரை நம்பி
டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கம் 207
விலை 250
------+
தவறுகள் செய்வது நொடிகள்... தண்டனையோ யுகங்களுக்கு...
--------+
அடிக்கடி நண்பர்கள் சிலர் கேட்கும் ஆலோசனை ஒன்று உண்டு. அதுவும் புத்தகத் திருவிழா சமயத்தில் இது அதிகம் நடக்கும்.
ஆர்வத்தோடு புத்தகத் திருழாவிற்கு வரும் பலர் எதை வாங்குவது என்று கேட்கும் ஆலோசனை தான் அது.
உண்மையில் அவர்களுக்கு நிறைய நூல்களை வாங்க வேண்டுமென்ற விருப்பம்தான். ஆனால் எதை வாங்குவது? யாரிடம் கேட்பது?
இந்த சமயத்தில் நான் கேட்பது உங்களுக்கு பிடித்த துறை எது?
நாவல் என்றால் எரியும் பனிக்காடு, வரலாறு என்றால் நள்ளிரவில் சுதந்திரம், சுற்றுச்சூழலுக்கு தியடோர் பாஸ்கரன்...
இதையே எத்தனை நாட்களுக்கு சொல்லிக் கொண்டிருப்பது.
இனி நிச்சயம் சொல்வேன் மதுரை நம்பி அவர்கள் எழுதிய சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் நூலை.
ஏனென்றால் இந்நூலில் உள்ளவை கட்டுரையா? புனைவா? சிறுகதையா? என்றால், எல்லாவற்றையும் தாண்டி கற்பனைக்கெட்டாத எந்தப் புனைவிலும் சாத்தியப்படாத மனிதர்கள்.. வாழ்க்கை.
36 ஆண்டு காலம் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் காவலராக பணியாற்றிய மதுரை நம்பி அவர்கள் பார்த்த கைதிகள், அதிகாரிகள்,சம்பவங்கள், இவற்றின் தொகுப்பே இந்நூல்.
இவற்றை படித்த பிறகு கைதிகள் என்ற சொல்லை பயன்படுத்தவே கூடாது என்றே நினைக்கிறேன்.காரணம்
"உள்ள உள்ள அத்தன பேரும் குற்றவாளி இல்லீங்க...
வெளிய உள்ள அத்தன பேரும் புத்தன் காந்தி இல்லீங்க"
என்று யாரோ எழுதி, இசையமைத்து பாடி இருந்தாலும் ரஜினி சொன்ன அறிவுரை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இந்நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் விதவிதமான மனிதர்களின் வாழ்க்கைத் துயரம் இருக்கிறது. பல சினிமாவுக்கான கதைகள் இருக்கிறது. ஆனாலும் எந்த இயக்குனராலும் இந்த வாழ்க்கையை நிச்சயம் பதிவு செய்ய முடியாது.
மனநலம் பிறழ்ந்து சுற்றித்திரிந்த ஒருவரை தீவிரவாதி என்று ஜெயிலில் அடைக்கும் கொடூரம். காரணம் பெயர் முகமது கான் என்பது மட்டுமே.
வெளியில் ஊருக்கு பத்து சாதி, சாதிக்கு 20 தலைவர்கள் என்றால் சிறைக்குள்ளும் சாதித்தலைவர்களின் படங்களை வரைந்து மகிழும் கைதிகள்..
வங்கியில் சேப்டி லாக்கர் கேள்விப்பட்டிருப்போம். சிறையில் சேப்டி லாக்கர் எது தெரியுமா?.
சிறைக்கு கஞ்சா,செல்போன், சார்ஜர் போன்ற பொருட்களை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பாக கொண்டு வர கைதிகள் பயன்படுத்தும் ஆசனவாய்தான் அது.
விசாரணை கைதிகளை கடப்பாறையால் அடித்து கை கால்களை உடைத்து லாக்கப்பில் அடைக்கும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று போற்றப்பட்ட அதிகாரி..
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிங்கள, தமிழ் மீனவர்கள். அவர்களை மீட்டு சொந்த நாட்டுக்கு அழைத்துச் செல்ல அக்கறையோடு இலங்கையில் இருந்து வந்து முயற்சி செய்யும் இலங்கை மீனவர் சங்கத் தலைவர் கனீசியஸ் பெர்னான்டோ. பணத்தாசை பிடித்த காவலரால் அவருக்கு நேர்ந்த முடிவு.
சிறையில் துப்புரவு பணியை மிகச் சிறப்பாக செய்து அனைவரின் அன்புக்கும் பாத்திரமான நாசர். அரசியல் கைதியாக உள்ளே வரும் சில காவிகளின் சீண்டலால் மனப்பிறழ்வாகி
நான் துலுக்கானா...
நீ கிறுக்கனா..
இன்று பிதற்றியபடி பைத்தியமாகிக்போகும் அவலம்...
சாலையோரம் இருந்த ஓலை குடிசையை ஆக்கிரமிக்க வந்த அரசியல்வாதியை கொன்று விட்டு சிறைக்கு வந்த சண்முகத்தின் குரல்,
"ஐயா அந்தக் கொலையோட என் வாழ்க்கையும் முடிஞ்சது என்று நினைத்தேன். ஒரு ஓலை குடிசைக்காக ஒரு அக்கிரமக்காரனை கொன்னேன். இப்ப கான்கிரீட் கட்டிடத்துல பேனுக்கு கீழே படுத்து இருக்கேன். அன்பான மனிதர்களுடன் வாழுறேன். அவர்களுடைய பேரக்குழந்தைகளும் என்னை தாத்தா என்று நினைக்கிறார்கள். இதைவிட என்ன சந்தோஷம் வேணும்" என்று சொல்லிக்கொண்டு இரண்டு பக்கமும் மீசையை தடவி கொடுத்தார். அந்த மீசை வெறும் மயிராக இல்லாமல் அர்த்தமுள்ள மீசையாக எனக்கு தெரிந்தது.
சிறையில் உள்ள கணவனை பார்க்க ஆர்வத்தோடு வரும் மனைவிகள் பலர் இருக்க, தயவு செய்து கணவனை வெளியில் அனுப்ப வேண்டாம் என்று மனு கொடுக்கும் மனைவி.
அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு சான்று, ஆயுள் தண்டனை குற்றவாளி வெளியிலும் அவருக்கு பதிலாக குற்றம் செய்யாத ஒருவர் பணத்துக்காக சிறையிலும்.
இந்த நூலின் உச்சபட்ச துயரம் "ஒரு பூவின் வாசம்" அத்தியாயத்தில் வரும் நடராஜன்- செல்வி. எந்த கதையிலும் படித்திராத, சினிமாவிலும் பார்த்திராத துயர வாழ்க்கை அது.
இவற்றுக்கிடையே சமூக அக்கறையோடு நம்பி பதிவு செய்யும் சில செய்திகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை..
"சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. அது சமூக அவலங்களின் பிரதிபலிப்பாகும். பல்வேறு குற்ற வழக்குகளில் பல்வேறுபட்ட மனிதர்கள் கைதாகி வந்து கொண்டே இருக்கிறார்கள். மிகவும் ஆபத்தானதாக பார்க்க வேண்டிய பிரச்சனை என்னவென்றால், கூலிப்படைகளின் வளர்ச்சியும், அதன் தலைவர்களின் வளர்ச்சியும் அவர்களின் அரசியல் தொடர்புகளும்தான். சிறு சிறு அடிதடி வழக்குகளிலும் திருட்டு வழிப்பறி வழக்குகளிலும் சிறைக்கு வரும் இளம் சிறைவாசிகள் சிலருக்கு சிறை கூடங்களே சமூக விரோத செயல்களுக்கான பள்ளிக்கூடங்களாகவும் கல்லூரிகளாகவும் அமைந்து விடுகின்றன...
...சமூகம் எந்த அளவுக்கு சீரழிந்து போய் உள்ளது என்பதை சிறையில் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கையை வைத்து முடிவு செய்யலாம். நான் பணியில் சேர்ந்த காலத்தில் 1985 க்கு பிறகான காலத்தில் விசாரணை பகுதியில் 20 வயதுக்குள் இருந்த சிறைவாசிகள் 15 பேருக்கு மிகாமல் இருந்தனர். அங்கு அவர்களுக்கு மைனர் ப்ளாக் என ஒரு சிறு ப்ளாக் ஒதுக்கப்பட்டு இருந்தது. இப்போது மதுரை மத்திய சிறையில் 100 பேருக்கு மேல் இளம் சிறைவாசிகள் இருக்கிறார்கள். இந்த இளம் சிறைவாசிகளை தான் பெரும் ரவுடி குழுக்களில் உள்ளவர்கள் தங்களது எடுபுடி வேலைகளுக்கும் சிலர் ஓரினச்சேர்க்கைக்கும் சிலர் தங்கள் கூலிப்படைக்கும் தயார் செய்வார்கள்.பெரும் ரவுடிகளின் எடுபிடி வீரராக இருக்க வேண்டும் என சில இளம் சிறைவாசிகளும் விரும்புவதுண்டு. இப்போது இருக்கும் பெரும் தாதாக்களில் பெரும்பாலும் இப்படி வளர்ந்தவர்களே...
போன்ற பதிவுகள் நிச்சயம் கவலை கொள்ள வைக்கிறது.
இந்த காட்சிகளினூடே சிறைக்கு வரும் கம்யூனிஸ்ட் மற்றும் நக்சலைட் தோழர்களின் ஆழ்ந்த படிப்பும், கொள்கைப் பிடிப்பும் பிரமிக்க வைக்கிறது.
மேலும்
நான் அதிகம் இருந்தது சிறையிலா.. வெளியிலா சொல்ல முடியுமா?
என்று கேட்கும் நம்பி,
சிறைகாவலர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக்க நடந்த தொடர் போராட்டங்களையும் விவரிக்கிறார்.
மொத்தத்தில் தனது நீண்ட பணிக்காலத்தில் சக மனிதர்களின் இதயங்களை ஊடுருவி பார்க்கக் கூடியவராக. அடுத்தவர் வார்த்தைகளை காது கொடுத்து கேட்கும் பண்புள்ளவராக இருந்திருக்கிறார் நம்பி.
இவரது மொழியும் , விவரிப்பும் புனைவைத் தாண்டிய காவியமாக நூலை மாற்றி இருக்கிறது.
இதை மட்டுமல்ல இந்நூலிலின் முதல் பாகத்தையும் அவசியம் வாசிக்க வேண்டும்.
No comments:
Post a Comment