Tuesday, October 29, 2024

நான் பயணித்த தமிழகம்

நான் பயணித்த தமிழகம்

 சுரேஷ் வெங்கடாத்ரி 

பவித்ரா பதிப்பகம்

 பக்கம் 242 

விலை 250 

8778924880




 நான் பயண விரும்பி. பயண இலக்கியங்களையும் விரும்பி வாசிப்பவன். அதனால் இந்நூலாசிரியரைப் பற்றிய எந்த அறிமுகமும்,எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில் நூலை வாசித்தேன். மிக சுவையான நூல்.

பயண கட்டுரைகள் பொதுவாக புகழ்பெற்ற சுற்றுலா தளங்கள், வரலாற்று இடங்களை பற்றியதாகவே இருக்கும். ஆனால் இது முற்றிலும் மாறுபட்டது.

தணிக்கை துறையில் பணியாற்றும் சுரேஷ்க்கு பணி நிமித்தம் தொடர்ந்து தமிழகம் முழுதும் பயணித்து ஓரிரு நாட்கள் தங்கி பணியாற்ற வேண்டிய சூழல். ஒரு வகையில் வேலையே ஊர் சுற்றுவதுதான்.

 கொடுத்து வைத்தவர். பயணம் தொடர்பாக அவர் அன்றாடம் எழுதிய சிறு குறிப்புகளின் தொகுப்பே இந்நூல்.

தமிழகத்தை நான்கு மண்டலங்களாக பிரித்து அதில் மாவட்ட வாரியாக மிகச் சிறிய ஊர்களையும் பதிவு செய்துள்ளார். பல ஊர் பெயர்களை முதல் முறையாக கேள்விப்படுகிறோம்.

ஒரு ஊருக்கு சென்றால் அவ்வூரைப் பற்றிய பொதுவான சித்திரம், அருகில் உள்ள பார்க்க வேண்டிய இடங்கள், தங்கும் விடுதிகள் , உணவு கடைகள் பற்றின சுவையான குறிப்புகள் இருந்தாலும் எனக்கு முக்கியமாகப் பட்டது சாப்பாட்டு விஷயம் தான்.

 தமிழகத்தின் பல நகரங்களிலும் சிற்றூர்களிலும் உள்ள சிறந்த உணவகங்களையும் அவற்றில் கிடைக்கும் சிறப்பான உணவுகளையும் இவ்வளவு விரிவாக பேசும் நூல் வேறு இல்லை என்றே சொல்லலாம்.

ஆச்சி மெஸ்-மன்னார்குடி என்ற தலைப்பில் உள்ள குறிப்பு...

 "இலையில் சாதம் அதிகமாக விழுந்து விடப் போகிறதே என்று கொஞ்சமாக..கொஞ்சமாக என்று அவசரமாக சொன்னேன். முக்கால் சட்டுவ சாதத்தோடு நிறுத்திவிட்டு 'சார் நீங்க கூட கேட்டாலும் இவ்வளவுதான் வைப்பேன், ஆனா இது பிரண்டை துவையலுக்கு மட்டும்தான், என்று சொல்லிவிட்டு ஒரு அபாரமான வாசனையும் சுவையும் கொண்ட துவையலை வைத்தார் அந்த சப்ளையர்.

 சொன்ன மாதிரியே அது தீர்ந்தவுடன் சாம்பாருக்கு, வத்தக்குழம்புக்கு, ரசத்துக்கு தயிருக்கு என்று சாப்பிடுபவர் மனமறிந்து,வயிறறிந்து பரிமாறுதல் தொடர்ந்தது. முதலில் வைத்த பொறியல், கூட்டு பச்சடி ஆகியவையும் அப்படித்தான். ஒவ்வொரு முறையும் மிகச் சரியான அளவுடன் ஆனால் தீர தீர வைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. எல்லாமே மிகத் தரமான சுவையுடன் இருந்தன.

 காலை டிபனுக்கு என்ன கிடைக்கும்? என்ற கேள்விக்கு 40 ஐட்டங்கள் இருக்கு எதை வேணாலும் சொல்லுங்க என்றார் முதலாளி. வழக்கமான இட்லி, பொங்கல் ,தோசை ,பூரி வகையறாக்களுடன் முர்தபா என்ற ஆலு பரோட்டா போன்ற ஒரு ஸ்பெஷல் ஐட்டமும் உண்டு. அதுபோல மதியம் புளிசாதம், எலுமிச்சை சாதம்,கருவேப்பிலை சாதம், புலவு சாதம், தயிர் வடை எல்லாமே பிரமாதம் தான்.

-இப்போது புரிகிறதா இது சுவையான நூல் என்று.

வெறும் குறிப்புகளாக மட்டுமல்லாமல் தேவையான இடங்களில் விரிவான வரலாற்று தகவல்களுடன் ஆறுகள், அணைக்கட்டுகள் போன்றவற்றின் புள்ளி விவரங்களும் உள்ளது. 

உதாரணத்திற்கு கிருஷ்ணகிரி அணையை பற்றி போகிற போக்கில் அவர் எழுதிச்செல்லும் ஒரு பத்தியில்

" இந்த அணையை பொருத்தவரை என்னை எப்போதும் கவரும் இரு கல்வெட்டுகள் உண்டு. அணைக்கட்டின் துவக்க நாளான ஜனவரி 3, 1955 அன்று முதலமைச்சரின் பெயர் 

கே காமராஜ் நாடார்.

பின் அணைக்கட்டு பணிகள் முடிந்து திறந்து வைக்கப்பட்ட நவம்பர் 11 தேதி கல்வெட்டில் இருக்கும் முதல்வரின் பெயர்

 கே.காமராஜ் . கால மாற்றத்தின் ஒரு பிரதிபலிப்பு அது."

அத்துடன் பயணிக்கும் ஊர்களோடு தொடர்புடைய ஆளுமைகள் பற்றிய குறிப்பும் இடம்பெறுகிறது. கும்பகோணம் போகும்போது கணிதமேதை ராமானுஜன் நினைவிடம், தஞ்சாவூர் ஆறுகளை பேசும்போது கல்கியையும் நினைவு கூற மறக்கவில்லை. அதுபோலவே தருமபுரி பயணத்தின் போது சுப்பிரமணிய சிவா நினைவிடத்துக்கும் போய் வந்திருக்கிறார்.

இந்நூலில் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு எழுதப்பட்ட குறிப்புகளே உள்ளன. 1993 இல் இருந்து பயணிக்கும் சுரேஷ் இன்னும் எழுத நிறைய இருக்கும்.

சில நூல்களை நூலக அலமாரியிலும் சிலவற்றை வாசிப்பு மேசையிலும் வைத்திருப்போம். இதை என் கார் டேஷ் போர்டில் வைத்திருக்கிறேன். இனி தமிழகத்தில் எந்த ஊருக்கும் செல்லலாம், தங்கலாம் சாப்பிடலாம்.

சுரேஷ் கூடவே இருக்கிறார்...


No comments:

Post a Comment