தகடூர் வட்டார வழக்குச்சொல் அகராதி
முனைவர் கு.சிவப்பிரகாசம்
மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ரயிலில் சென்று கொண்டிருந்தோம். ஓரிரு வார்த்தைகளே பேசிய நிலையில் , தருமபுரியா என்று குறுஞ்சிரிப்போடு கேட்டார் டிக்கெட் பரிசோதகர்.
டிக்கெட் உங்கிட்ட கீதா என்று நான் கேட்டதில் அவர் கண்டுபிடித்துவிட்டதாக உடன் வந்த நண்பர் வருத்தப்பட்டார். எனக்கு எந்த வருத்தமோ தாழ்வுணர்ச்சியோ இல்லை.
'கீதா' என்ற சொல் நம்மூருக்கு உரியது என்றால் பெருமிதம்தான்.அது ஒன்றும் கெட்ட வார்த்தையோ சொல்லத் தகாததோ அல்ல . நாஞ்சில்நாடனிடம் கேட்டால் பழந்தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் கீது வந்திருக்கிறது என சொல்லக்கூடும்.
இப்படி ஊர் தோறும் மக்கள் அன்றாடம் பேசி வரும் பல சொற்களை வட்டார வழக்கு என்று ஒதுக்கி வைத்திருக்கிறோம் .
ஒரு மொழியின் வளமே அதன் சொற்களஞ்சியத்தில் இருக்கிறது. சென்னை பல்கலைக்கழகம் 1927-ல் தொகுத்த தமிழ் அகராதியில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் சொற்கள் இருக்கின்றது. தமிழில் உள்ள அத்தனை சொற்களும் அதில் இடம் பெற்றிருக்குமா என்றால், நிச்சயம் இல்லை. இவ்வளவு வளமிக்க மொழியிலிருந்து நாம் அன்றாடம் பேச்சு வழக்கில் வெறும் 400 முதல் 500 சொற்களையே பயன்படுத்துகிறோம் என்ற ஆய்வுமுடிவும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
மக்களின் வாழ்க்கையே இலக்கியங்களாக எழுதப்பட்டு வரும் நிலையில் அகராதியில் இடம்பெறாத பல சொற்கள் புனைவுகளில் அந்தந்த பகுதி எழுத்தாளர்களால் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. தருமபுரி பகுதியை மையப்படுத்தி எழுதப்பட்டு பரவலான கவனம் பெற்ற படைப்புகள் குறைவு.
வட்டார வழக்கு சொல் அகராதிகள் புதிதன்று. கி ரா வின் கரிசல் வட்டார வழக்கு அகராதி தொடங்கி பெருமாள் முருகனின் கொங்கு வட்டார சொல்லகராதி, கண்மணி குணசேகரன் நடுநாட்டு சொல் அகராதி என பல முன்னோடி முயற்சிகள் நடந்திருக்கிறது.
இந்நிலையில் தருமபுரி அரசு கலை கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் சிவப்பிரகாசம் அவர்கள் தொகுத்திருக்கும் தகடூர் வட்டார வழக்குச்சொல் அகராதி மிகுந்த கவனம் பெறுகிறது .
பேராசிரியர் இந்நூலில் ஏறத்தாழ 1500 சொற்களை தொகுத்திருக்கிறார்.
சொற்களுக்குறிய பொருளும், பொருத்தமான உதாரண வாக்கியங்களும் ஒரு புனைவை படிப்பது போன்ற சுவாரசியத்தை தருகின்றன.
மல்லாக்கியும், பலாசனையா, உமுக்கு, கிட்டவுட்டா, கொய்யகுத்தி போன்றபல சொற்களை நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்க வாய்ப்பு.
"திம்புதல்" என்ற சொல்லுக்கு தும்முதல் என்றும், "வேசேத்து" என்பதற்கு சலித்துப் போதல் என்றும் நூலில் உள்ளது. இதே மாவட்டத்தை சார்ந்த எனக்கு இவ்விரு சொற்களுமே புதிதாய் உள்ளது. இதிலிருந்தே இச்சொற்கள் தொகுத்து பதிவு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை உணரலாம்.
இது தொடக்கம்தான் . தொடர்ச்சியாக தருமபுரி கதை, பாடல்கள், பழமொழிகள் ,சொலவடைகள், நம்பிக்கைகள் இவற்றையும் தொகுக்கலாம்.
பேராசிரியரின் மாணவர்கள் செய்வார்கள்.
இந்நூல் கல்விப் புலத்திலிருந்து வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பேராசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது.
வாழ்த்துக்கள்...
நூல் தேவைக்கு..
96888 07312
சிறப்பான தொகுப்பு, தோழர்
ReplyDeleteநல்ல முயற்சி.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
இந்த நூலை அனைவரும் படிக்க வேண்டும். அத்துடன் இந்த நூல் பற்றிய விவாதம் அவசியம். அப்பொழுதுதான் அடுத்த பதிப்பு மேலும் சிறப்பாக இருக்கும்.
நன்றி
தலைநகருக்கு அருகில் நாம் இருந்தாலும் தொலைதூரத்தில் இருக்கும் தென்மாவட்டங்கள் போல படைப்புத் துறைகளிலும் திரை துறையிலும் சோபிக்கவில்லை நமது கலை கலாச்சாரத்தை ஊரறிய செய்ய மிக சிறந்த பங்காற்றி வரும் இதுபோன்ற படைப்புகளையும் ஆசிரியர்களையும் அறிமுகப்படுத்தும் ஆசிரியர் தங்கமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள். நூலாசிரியரை ஒரு பயிற்சி களத்தில் சந்திக்கும் போதே அவரின் ஆளுமை அறிந்தேன்.
ReplyDeleteஉங்களின் நூல் அறிமுகம் அருமை. வாழ்த்துகள்
சிறப்பு சிவா
ReplyDeleteபெரும் முயற்சியில் இந்த நூல் உருவாகி இருக்கிறது என்று கருதுகிறேன். தகடூர் மக்களின் வாழ்வில் இரண்டற கலந்துள்ள வட்டார வழக்குச் சொற்களைத் தொகுத்து நூலாக்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது தமிழ் கூறும் நல் உலகத்திற்கு பயனுள்ள படைப்பு தரவுகளைத் திரட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல மிகப்பெரிய சவால் தங்களின் அறிவு கூர்மைக்கும் தொலைநோக்கு சிந்தனைக்கும் தமிழ் புலமைக்கும் சிறந்த சான்று மிக்க மகிழ்ச்சி மேலும் பல பயனுள்ள படைப்புகள் உருவாக வாழ்த்துக்கள் அண்ணா எனக்கு ஒரு பிரதி வழங்குமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
ReplyDeleteநூலிற்கான அறிமுகம் அருமை தமிழ் பேராசன் அவர்களே.
ReplyDeleteதொடரட்டும் உங்கள் சிறப்பு மிக்க பணி.